கேரித்தீவு தோட்டத் தொழிலாளர் வீடமைப்புத் திட்டத்தில் ஸைட் ஹமிடியின்  திருகுதாளம்

  • சேவியர் ஜெயக்குமார், மே5, 2018.

கடந்த மே 1 இல், கோலலங்காட் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள கேரித்தீவுக்கு வருகை புரிந்த துணைப் பிரதமர் ஸைட் ஹமிடி தோட்டத் தொழிலாளர் வீடமைப்புத் திட்டத்திற்கு உறுதி அளித்துள்ளார். ஆனால் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றினால் மட்டுமே வீடமைப்புத் திட்டத்தைப் பாரிசான்  அரசாங்கம் குறுகிய காலத்தில் அமல்படுத்தும் என்றார்.

 

இது ஒன்றும் புதிய வாக்குறுதியல்ல என்பது இத்தொகுதி மக்களுக்கு நன்கு தெரியும், கடந்த தேர்தலுக்கு முன் பிரதமர் நஜிப் கொடுத்த வாக்குறுதியை நகர்ப்புற நல்வாழ்வுத்துறை அமைச்சர் நோர் ஓமாரும் துணைப்பிரதமர் ஸைட் ஹமிடியும் மாறி-மாறி  புதுப்பித்து வருகின்றனர்.

 

ஆனால், துணைப் பிரதமர் ஸைட் ஹமிடி, தோட்டத் தொழிலாளர்களின் புத்திசாலித்தனத்தைச் சோதிப்பதாக எண்ணிக்கொண்டு தன் முட்டாள்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அவரது பேச்சு புலப்படுத்துகிறது.

 

இந்தியர்கள் 50ஆம், 60ஆம் ஆண்டுகால தலைமுறைகளைப் போல் ஏமாளி இனமாக இன்னும் வாழவில்லை, அவர்கள் பழமையான பாரிசானின் சிந்தனைகளிலிருந்து விடுபட்டு வெகுநாளாகி விட்டது என்பதை அவர்களின் வாக்கு சீட்டுகளின் வழி 14 பொதுத் தேர்தலில் பாரிசான் தலைவர்களுக்கு உணர்த்துவர் என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

மக்கள் நலனில், இந்தியர்களின்  உயர்வில்  அக்கறையுள்ள ஓர் அரசாங்கமாகப் பாரிசான் இருந்திருந்தால், ஒவ்வொரு தேர்தலுக்கும் காலாவதியான வாக்குறுதிகளைப் புதுப்பிக்கும் நிலை அதற்கு ஏற்பட்டிருக்காது, மக்களை மதித்து, மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை அது  செயல்படுத்தியிருக்கும்.

 

 

இந்தியர்கள் 60 ஆண்டுகளாகப் பாரிசானுக்கு காட்டிவந்த விசுவாசத்திற்கு அவர்களை நாடற்றவர்களாக மட்டுமின்றி வீடற்றவர்களாகவும் ஆக்கிவிட்ட பெருமை இந்த அரசையே சாரும்.

 

சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றினால் மட்டுமே ஒரு தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர் வீடமைப்புத் திட்டத்தைப் பாரிசான் அரசாங்கம் குறுகிய காலத்தில் அமல்படுத்தும் என்பது, முழுக்கப் பாவம் செய்த இவர்கள், தங்கள் பாவச் செயலுக்குப் பழியை மற்றவர்கள் மீது சுமத்துவதற்கு ஒப்பாகும்.

 

சுமார் 40,000 வாக்காளர்களைக் கொண்ட சிஜாங்காங் சட்டமன்றத் தொகுதியின் முடிவையோ அல்லது ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட கோலா லங்காட் நாடாளுமன்றத்  தொகுதியின் தேர்தல் முடிவையோ சுமார் 1,800 கேரித்தீவு வாக்காளர்கள் மட்டும் தன்னந்தனியாக  மாற்றமுடியாது.

 

ஆனால் சிலாங்கூர் மாநிலத்தில் பாரிசானின் ஒட்டு மொத்தத் தோல்விக்கே கேரித்தீவு தோட்டப் பாட்டாளிகளை குற்றம் சொல்வது, பாரிசான் தேர்தல் தோல்விக்கான தண்டனையைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்குவதற்கு ஒப்பாகும். 

 

மக்கள் இந்த ஆட்சியையே மாற்ற முடிவு எடுத்தபின், அறிவுக்கு ஒவ்வாத உறுதிகளைத் தோட்ட மக்களிடம் இருந்து பெறுவதும், வாக்குறுதிகளைத் துணைப் பிரதமர் வழங்குவதும், அவரின்  நுண்ணறிவு மீது கேள்வி எழுப்புவதாக இருக்கிறது.

 

ஒரே ஒரு தோட்டத்தில் வீடமைப்புத் திட்டத்தை அமல்படுத்தப் பாரிசானை ஆட்சியில் அமர்த்துவதை விட, தோட்ட மக்கள் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து ஆட்சி மாற்றத்திற்கு, பங்களிப்பை வழங்குவதன் வழி, நாடு முழுவதிலும் உள்ள தோட்டப் பாடாளிகள் பயனடையும் வண்ணம்  தோட்டப்புற வீடமைப்புகளுக்கு வழி வகுக்கலாம் என்றார் பக்காத்தான் ஹராப்பான் கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளரும், கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.