மகாதிர்: ஹரப்பான் சுலபமாக வெற்றி பெறும்

 

நாடு தழுவிய அளவில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த பக்கத்தான் ஹரப்பன் தலைவர் மகாதிர், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாரிசான் நேசனலை வீழ்த்துவதில் வெற்றி பெறும் என்றும் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

“எனது கணிப்பு நாங்கள் சுலபமாக வெற்றி பெறுவோம்”, என்று நேற்று புத்ரா ஜெயாவில் அவரது அலுவலகத்தில் ஒரு நேர்காணலில் மலேசியாகினியிடம் மகாதிர் கூறினார்.

ஹரப்பானின் விளம்பரப் பலகையிலிருந்து அவரது உருவப் படத்தை அகற்ற தேர்தல் ஆணையம் எடுத்துக் கொண்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருந்த மகாதிர், கடைசி நேரத்தில், பிஎன் மோசடி வேலைகளில் ஈடுபடக்கூடும் என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார்.

“எங்களைப் பொறுத்தவாரையில், நாங்கள் வெற்றி பெறப் போகிறோம், ஆனால் நஜிப் என்ன செய்வார் என்பதை நாங்கள் முன்கூட்டியே அறிய முடியாது”, என்று மகாதிர் மேலும் கூறினார்.

வெற்றி பெறுவோம் என்ற மகாதிரின் நம்பிக்கைக்கு அடிப்படையாக இருப்பது அவர் மேற்கொண்ட பிரச்சார நிகழ்ச்சிகளில் அவர் கண்ட மக்களின் உணர்ச்சி வெளிப்பாடு வியப்பளிப்பதாக இருந்தது என்றாரவர்.

தாம் பல தேர்தல் பிரச்சாரங்களைச் செய்திருப்பதாகக் கூறிய அவர், இப்போது கிடைக்கும் ஆதரவைப் போல் கண்டதே இல்லை என்றார்.

தெமர்லோவில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்; குவாந்தானில் கிட்டத்தட்ட 40,000 பேர் பங்கேற்றனர்.

அம்னோவின் கோட்டையான புத்ரா ஜெயாவில் வியாழக்கிழமை நடந்த ஹரப்பான் செராமா 10,000 மேற்பட்டவர்களைக் கவர்ந்துள்ளது.

நேற்றிரவு, புத்ரா ஜெயாவில் 12,000 பேர் திரண்டதாக நான் நினைக்கிறேன். ஆனால் 25,000 மேற்பட்டவர்கள் இருந்ததாக சிலர் கூறினர்.

பினாங்கில், இதற்குமுன் நடந்திராத அளவில் 100,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊடகங்கள் அதைப் பார்க்க முடியும். ஆனால், நீங்கள் தோற்கப் போகிறீர்கள் என்று என்னிடம் கூறுகின்றன என்றார் மகாதிர்.