பெர்சே: இசி-யின் ‘10 கடுங் குற்றங்கள்’ ; மலேசியர்கள் வாக்குச்சீட்டுகளால் பதிலடி கொடுக்க வேண்டும்

தேர்தல்   ஆணைய(இசி)த்தின்    நடத்தை     ‘இதுவரை  சுத்தமாகவும்,  சுதந்திரமாகவும்  நியாயமாகவும்’   இல்லை  என்கிறது    தேர்தல்   கண்காணிப்பு   அமைப்பான   பெர்சே.

இசியின்  10  “கடுங்  குற்றங்களை”ப்   பட்டியலிட்ட   பெர்சே   இடைக்காலத்     தலைவர்   ஷாருல்   அமான்   முகம்மட்  சாஆரி,    தேர்தல்   முறையின்   நேர்மையையே    விட்டுக்கொடுக்க    முனையும்   இசியின்   திருகுதாளங்களை   முறியடிக்க    எல்லா   வாக்காளர்களும்    திரண்டு    வந்து   வாக்களிக்க    வேண்டும்     என்று    கேட்டுக்கொண்டார்.

“இசி   கடமை   தவறி  விட்டது.   அது   தேர்தலில்  நேர்மையை  நிலைநாட்ட வில்லை.

“இனி,  எல்லாம்   உங்களைப்  பொருத்துள்ளது. 2008-இலும்  2013-இலும்   செய்ததுபோல்    வாக்காளர்கள்   திரண்டு   வந்து   வாக்களித்தால்    மட்டுமே     தேர்தல்   மோசடிகளையும்  சூழ்ச்சிகளையும்   முறியடிக்க   முடியும்”,  என்றவர்   இன்று   பெட்டாலிங்   ஜெயாவில்   செய்தியாளர்   கூட்டமொன்றில்     கூறினார்.

“தேர்தல்   குற்றங்கள்”    என்ற   அப்பட்டியலில்,      கையூட்டுக்  கொடுத்தல்,  வாக்குகளை  விலைக்கு  வாங்குதல்,   போட்டியிடும்    தரப்பு   அன்பளிப்புகள்   வழங்குதல்   போன்ற  குற்றங்களுக்கு    எதிராக   இசி   நடவடிக்கை   எடுக்கத்    தவறிவிட்டது  ஒரு  குற்றமாகக்   குறிப்பிடப்பட்டிருந்தது.

இசிக்கு    எதிரான   குற்றச்சாட்டுகளில்,   அது   வாக்காளர்   பட்டியலைச்   சரிப்படுத்தத்    தவறியது,    தகுதி  வாய்ந்தவர்களைப்   பதிவு    செய்ய  மறுத்தது,   நியாயமற்ற   தேர்தல்  விதிமுறைகளை   அமல்படுத்தியது,   தேர்தலைக்  கண்காணிக்க    அனுமதி   அளிக்காதது     போன்றவையும்     இடம்பெற்றிருந்தன.