119 நாடாளுமன்ற இருக்கைகள் கிடைக்கும் என்று கிட் சியாங் நம்புகிறார்

புதன்கிழமை நடைபெறும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் 119 நாடாளுமன்ற இருக்கைகளை கைப்பற்றும் என்று லிம் கிட் சியாங் நம்புகிறார்.

எங்களுடைய இலக்கு 120 நாடாளுமன்ற இருக்கைகளாக இருந்தது. ஆனால் நாம் பத்து நாடாளுமன்ற இருக்கையை இழந்து விட்டோம் என்று ஜோகூர், சினாய் விமான நிலயத்தில் சீனமொழி ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறினார்.

பத்து தொகுதியில் பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவாவின் வேட்பாளர் நியமனம் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனிடையே, அத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் கே. பிரபாகரனுக்கு பிகேஆர் ஆதரவு தெரிவித்துள்ளது.

நஜிப்பை பதவியிலிருந்து அகற்றுவதற்கு தேவையான மலாய் சுனாமி திரண்டு விட்டதா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு நாம் இன்னும் பொருத்திருக்க வேண்டும் என்றாரவர்.

மலாய் சுனாமி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஒரு மலாய், சீன மற்றும் இந்திய சுனாமி ஏற்படுவதைக் காணும் நம்பிக்கையில் இருக்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

பக்கத்தான் ஹரப்பான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால், மகாதிர் இரும்புக் கரம் கொண்டு ஆள்வதற்கு மீண்டும் அனுமதிக்கப்பட மாட்டார் என்று கிட் சியாங் தெளிவுப்படுத்தினார்.

பிஎன் கட்டமைப்பில் அம்னோ மட்டுமே அதிகாரம் செலுத்துகிறது. ஹரப்பானின் நான்கு உறுப்புக் கட்சிகளும் சமமான பங்காளிகள் என்று அவர் விளக்கம் அளித்தார்.