இரண்டு நாட்களுக்கு முன்னர், ஜொகூர், கோத்தா திங்கி, தஞ்சோங் கெமோக் (Tanjung Gemuk) நீர்ப்பரப்பில் பிடிபட்ட 131 இலங்கை அகதிகள், ஜொகூர் பெக்கான் நெனாஸ் (Pekan Nenas) தடுப்புக் காவல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு 3 மாதக் குழந்தை உட்பட, 98 ஆண்கள், 24 பெண்கள் (6 கர்ப்பிணிகள்) மற்றும் 8 சிறுவர்கள் அவர்களில் அடங்குவர் என இன்று காலை, அம்முகாமில் அவர்களை இரண்டாம் முறையாகக் காணச் சென்ற ஜொகூர் செம்பருத்தி தோழர்களின் ஒருங்கிணைப்பாளர் மோகன் பெரியசாமி தெரிவித்தார்.
கடந்த வியாழனன்று, செய்தி அறிந்து இங்கு வந்து விசாரித்தபோது, அப்படி யாரையும் தாங்கள் தடுத்து வைக்கவில்லை என்று தடுப்பு முகாமின் அதிகாரிகள் கூறியதாக மோகன் செம்பருத்தி.கோம்-இடம் தெரிவித்தார்.
இன்று காலை, அங்குச் சென்றபோது தடுப்புக் காவலில் இருப்போரைச் சந்திக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறிது வாக்குவாதங்களுக்குப் பின்னர், வெளியே வந்த முகாமின் துணை கமெண்டர், சடினி, அந்த 131 பேரும் உள்ளே இருப்பதை ஒப்புக்கொண்டார், எனினும் மேலிடத்து உத்தரவு இன்றி அவர்களை யாரும் பார்க்க இயலாது என்று அவர் கூறியதாக மோகன் தெரிவித்தார்.
செய்தி அறிந்து அங்கு வந்த பொந்தியான் மாவட்ட தலைமையகத்தின் இன்ஸ்பெக்டர் ஷஃப்ரி, இவர்களுக்கு அனுமதி பெற்றுதர முயன்று தோல்வியுற்றார்.
தடுத்து வைக்கப்பட்டவர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்படுவது நியாயமானதல்ல என்று கோலாலம்பூரிலிருந்து வந்திருந்த வழக்கறிஞர் மஹா தெரிவித்தார்.
“எங்களுக்குப் பிடிபட்டிருப்பவர்களின் பாதுகாப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். காரணம், கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் உள்ளே இருக்கின்றனர். இந்த 131 பேருக்கும் யூ.என்.எச்.சி.ஆர். அட்டையும் இருக்கிறது,” என்றார் மஹா.
“இவர்களை வேறு ஒரு நாட்டிற்குக் கடத்திச்செல்ல முயன்ற வேளை இவர்கள் அனைவரும் மலேசிய போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆள் கடத்தல் கும்பல் ஒன்றும் ஈடுபட்டுள்ளதாக நாங்கள் அறிகிறோம்,” என்றார் மஹா.
மதியம் சுமார் 1 மணியளவில், கோத்தா திங்கி மாவட்டக் காவல் தலைமையகம் சென்று விசாரித்த போது, அவர்களைக் கைது செய்தது புக்கிட் அமான் தலைமையகப் போலிசார் என்றும், இவ்வழக்கை முகமட் நிக்கோலஸ் ஜஃப்ஃபான் விசாரணை செய்து வருவதாகவும் தெரியவந்தது.
புக்கிட் அமான் விசாரணை அதிகாரி (ஐ.ஓ.) நிக்கோலஸ்-ஐ தொடர்புகொண்டபோது, இதில் ஆள் கடத்தல் கும்பல் ஒன்றின் தலையீடு இருப்பதால், கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெற்றபிறகே அவர்கள் வழக்கறிஞரைச் சந்திக்க அனுமதிக்க முடியுமெனக் கூறியதாக மஹா தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை, ஒரு டாங்கிக் கப்பலின் மூலம், இவர்களை நியூசிலாந்துக்குக் கடத்திச்செல்ல ஒரு குழு முயன்றதாகத் தெரிகிறது. இலங்கை அகதிகளை அக்கப்பலுக்கு ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் 3 இந்தோனேசியர்கள் மற்றும் 4 மலேசியர்களை ஒரு மீனவப் படகில் கைது செய்ததாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், இவர்களோடு தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 4 பேர் ஜொகூர் பாரு வட்டாரத்திலும் ஒருவர் பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய அமைதி மறியலில் கலந்துகொண்ட சமூக ஆர்வளர் க.செல்வக்குமார், ஆள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது, அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இவர்களிடம் சிக்கித் தவிக்கும் அப்பாவிகளை மீட்டு, தக்க பாதுகாப்பு வழங்க வேண்டுமே ஒழிய, அவர்களைத் தண்டிக்கக் கூடாது என்றும் கூறினார்.
இன்று, ஜொகூர் செம்பருத்தி தோழர்களுடன், மலேசியத் தமிழ்நெறிக் கழகம், ஜொகூர் யெல்லோ ஃபிலேம் (Johor Yellow Flame –JYF) மற்றும் பி.எஸ்.எம்., ஜசெக, ம.இ.கா. போன்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட சுமார் 25 பேர் கலந்துகொண்டு, தடுப்புக்காவலில் இருக்கும் அகதிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.