மலேசியா இன்று உலகளவில் பெருமளவில் பேசப்படும் நாடாகத் திகழ்கிறது. நாட்டு மக்களின் வறுமையை ஒழித்துக்கட்டியதற்காக அது பேசப்படவில்லை. பாலர்பள்ளியிலிருந்து பல்கலைகழகம் வரையில் இலவசக் கல்வி வழங்கப்படுவதற்காக அது பேசப்படவில்லை. அதன் தலைவர்கள் ஊழலற்ற உத்தமர்கள் என்பதற்காக அது பேசப்படவில்லை.
மாறாக, மலேசியா உலக நாடுகளிலேயே ஒரு முதன்மையான கொள்ளைக்காரவாதிகள் (Keleptocrates) ஆதிக்கம் செலுத்தும் நாடாளாகி விட்டது என்று பேசப்படுகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது அதிகாரிகள் (Pubic Officials) மற்றும் அரசாங்க ஊழியர்கள் பொதுச் சொத்தை, மக்களின் சொத்தை, கொள்ளையடித்து குபேரர்களாக வலம் வருவது ஓர் உயர்மட்ட கலாச்சாரமாக உலகளவில் இருந்து வருகிறது. மலேசியப் பொது அதிகாரிகள் தாங்கள் பொதுச் சொத்தைக் கொள்ளையடிப்பதில் மற்ற நாட்டினருக்குச் சளைத்தவர்கள் அல்லர் என்பதை உலகமறியக் காட்டி வருகின்றனர்.
பொதுச் சொத்து கொள்ளையடிக்கப்படுவதால் உலகப் பொருளாதாரம் மற்றும் உலக மக்களின், குறிப்பாக ஆசிய-ஆப்ரிக்க மக்களின், வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. ஆகவே, இந்தக் கொள்ளைக்கார கலாச்சாரம் வேரறுக்கப்பட வேண்டும். கொள்ளைக்காரவாதிகளின் ஆதிக்கமற்ற ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டும் என்ற வேட்கை உலகளவில் உருவெடுத்து வருகிறது.அவ்வேட்கையை மலேசியாவில் பிரதிபளிப்பவர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜ். அதை முன்னெடுத்துள்ள ஒரே அரசியல் கட்சி மாலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்).
ஆட்சியில் மற்றும் அதிகாரத்தில் இருக்கும் பொது அதிகாரிகள் (அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்) மற்றும் அரசு ஊழியர்கள் அவர்களுடைய சொத்துகள் பற்றிய விவரங்களை அவர்களைப் பதவியில் அமர்த்திய, அவர்களுக்கு ஊதியம் அளிக்கும், பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தி அதை அவர்களின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதின் வழி பொதுச் சொத்து கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்கும் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் வேரூன்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு உலகளவில் ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுச் சொத்துகள் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மிகக்
குறிப்பிட்டதக்க ஒன்று ஐக்கிய நாட்டு அமைப்பின் பொதுச் சபை ஏற்றுக்கொண்ட ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தம் (The United Nations Convention against Corruption (UNCAC)). இந்த ஒப்பந்தத்தை ஏப்ரல் 18, 2018 வரையில் 184 நாடுகள் அங்கீகரித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் உன்னத நோக்கம் ஊழலை ஒழிப்பதற்கு முறையான சட்ட அமைப்புகளை ஏற்படுத்துவதுடன் பொது அதிகாரிகள் தங்களுடைய சொத்துகளை பொதுமக்களின் கூர்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தும் புதிய அரசியல் கலாச்சாரத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்பதாகும்.
இந்த ஐநா ஒப்பந்தத்தைத் தீவிரமாக ஆதரிப்பதாக கூறிக்கொள்ளும் நாடுகளில் ஒன்று மலேசியா. 2005 ஆம் ஆண்டில் அமலாக்கத்திற்கு வந்த இந்த ஒப்பந்தத்தில் மலேசியா 2003 ஆண்டில் கையொப்பமிட்டது. 2008 ஆம் ஆண்டில் மலேசியா அந்த ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.
மலேசிய அரசாங்கத்தின் பிரதிநிதியாக வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ரயிஸ் யாத்திம் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். இந்த ஒப்பந்தத்திற்கு மலேசியா அளித்துள்ள அங்கீகாரம் ஊழலை ஒழித்துக்கட்ட மலேசியா கொண்டிருக்கும் மனத் திண்மையைக் காட்டுகிறது என்று ரயிஸ் கூறினார்.
மேலும், “This document is proof to the international community that Malaysia takes seriously the fight against corruption and will join efforts against the menace at the international level,” என்றாரவர்.
இந்த அங்கீகரிப்பட்ட ஆவணத்தை மலேசியாவின் அப்போதைய துணைப் பிரதமர் நஜிப் ரசாக் நேரடியாக ஐநாவிடம் கொடுப்பார் என்றும் ரயிஸ் தெரிவித்தார்.
நஜிப் அவரது சொத்தை யாரிடம் தெரிவித்தார்?
ஊழலை எதிர்க்கும் தீவிரமான போராட்டதின் முக்கிய அங்கம் பொது அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் அவர்களின் சொத்துகளைப் பகிரங்கமாக அறிவிப்பதும் ஒன்று. அது அவர்களின் கடப்பாடு என்பதும் மறுக்கப்படவில்லை. இதன் பொருள் சொத்துகளை பகிரங்கமாக பொதுமக்களுக்குத் தெரிவிப்பது கட்டாயமாகும்.
சொத்துகளை அறிவிக்கும் கடப்பாட்டை மலேசிய பொது அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மறுக்கவில்லை. ஆனால், அதை அவர்கள் அமலாக்கம் செய்வதாகக் கூறும் முறை அவர்கள் எப்பேற்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதைக் காட்டுகிறது.
பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் சொத்துகளைத் தம்மிடம் தெரிவிக்கின்றனர் என்று பிரதமர் நஜிப் 2012 இல் கூறியுள்ளார்.
பிரதமரிடம் சொத்து விபரம் தெரிவிக்கப்படுகிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பிரதமர்தான் வாயில் காவலர். அவரை நம்பாமல் வேறு யாரை நம்புவது என்று கேட்கப்படுகிறது.
இதில் கேட்கப்படாமல் இருக்கும் கேள்வி: பிரதமர் நஜிப் ரசாக் அவரது சொத்தை யாரிடம் தெரிவிக்கிறார்?
பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அசிஸா வான் இஸ்மாயில் அவரது சொத்தை யாரிடம் தெரிவிக்கிறார்? பாஸ் கட்சியின் தலைவர், டிஎபியின் தலைவர் போன்ற எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரிடம் அவர்களின் சொத்தைத் தெரிவிக்கின்றனர்? இந்த விவகாரத்தில் ஓர் அலட்சியமான கருத்தை வெளியிட்டவர் டிஎபியின் டோனி புவா. தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான பின்னர் சொத்தை அறிவிக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.
கேள்வி: அம்னோ தலைவர் அவரின் சொத்தை பகிரங்கமாக மக்களிடம் தாக்கல் செய்தாரா? இல்லை. மசீச தலைவர், செய்தாரா? மஇகா தலைவர், செய்தாரா? பிகேஆர் தலைவர், செய்தாரா? டிஎபி தலைவர், செய்தாரா? அமனா தலைவர், செய்தாரா? பார்ட்டி பிரிபூமி தலைவர், செய்தாரா? பாஸ் தலைவர், செய்தாரா? இவர்களில் யாரும் அதைச் செய்யவே இல்லை, இல்லை, இல்லை!
தங்களுடைய சொத்துகளைப் பகிரங்கமாக தங்களுக்குப் பதவி கொடுத்து வாழ வைக்கும் பொதுமக்களிடம் தெரிவிக்காத இவர்களுக்கும், இவர்களது கட்சிகளுக்கும் விதிவிலக்காக இந்த நாட்டில் ஒரே ஒரு கட்சி இருக்கிறது, ஒரே ஒரு தலைவர் இருக்கிறார். அந்தக் கட்சி மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்); அந்தத் தலைவர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜ். தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சியின் இதர தலைவர்களும் அவர்களுடையச் சொத்துகளை பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
14 ஆவது பொதுத் தேர்தலுக்காக மார்ச் மாதத்தில் களைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் 222 உறுப்பினர்கள் அங்கம் பெற்றிருந்தனர்.
அந்த 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற 221 பேரும் அவர்களின் சொத்தை பகிரங்கமாக அவர்களின் எஜமானர்களுக்கு, அவர்களுக்கு வாக்களித்து தேர்வு செய்த மக்களுக்கு, அவர்களின் கூர்ந்த ஆயவுக்காக தாக்கல் செய்யவில்லை.
அந்தத் தலையாயக் கடமையை ஆற்றிய ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மலேசிய சோசலிசக் கட்சியின் உறுப்பினர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜ்!
நன்னெறியில் ஜெயக்குமார் தங்களைவிட ஒரு படி உயர்ந்த நிலையில் இருக்கிறார் என்பது இதரக் கட்சிகளின் தலைவர்களுக்குத் தெரியும். அவ்வாறே பிஎஸ்எம் மற்றும் அதன் இதர தலைவர்கள் ஏழை, எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்காகப் போராடும் கட்சி என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஏழை மக்களின் எழுச்சி தங்களின் குபேர வாழ்க்கைக்கு முடிவு கட்டி விடும் என்பதையும் அவர்கள் அறிவர். ஆகவே, பிஎஸ்எம் தீண்டத்தகாத ஒன்றாக நடத்தப்படுகிறது.
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அது போல சிறையிலிருக்கும் ரிபோமாசி தலைவர் அன்வாருக்கு “முஷ்டி” என்றால் அலர்ஜி. பிஎஸ்எம்மின் “முஷ்டி” சின்னத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் அந்த முஷ்டி சின்னத்தில் கம்யூனிஸம் ஒளிந்திருப்பதாக எண்ணுகிறார்.
ஆண்டவன் ஆறு நாள்கள் உழைத்தார். ஏழாவது ஓய்வெடுத்துக் கொண்டார் என்று பைபிள் கூறுகிறது. தொழிலாளர்களுக்கு ஏழாவது நாள் ஓய்வு கொடுங்கள் என்கிறது பிஎஸ்எம்; சொர்க்கம், இந்தப் பூமியில் என்கிறார் ஏசு நாதர். தொழிலாளர்களுக்கு நல்வாழ்க்கை என்ற சொர்க்கத்தைக் கேட்கிறது பிஎஸ்எம்; நெற்றி வேர்வை காய்வதற்குள் ஊதியம் கொடு என்கிறார் இறைத் தூதர் முகமட். அந்த அளவிற்கு இன்னும் செல்லாமல், ஊதியம் கொடுக்காமல் இழுக்கடிக்காதே என்கிறது பிஎஸ்எம்; உழைக்காமல் உண்பவன் உண்மையிலே ஒரு திருடன் என்று கிருஷ்ணாவின் பகவத் கீதை கூறுவதை மேற்கோள் காட்டி மகாத்மா காந்தி தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி உள்ளார். இதைத்தானே பிஎஸ்எம் வலியுறுத்தி வருகிறது. இதில் கம்யூனிசம் எங்கே இருக்கிறது. இல்லை, இல்லை, இதுதான் கம்யூனிசம் என்றால், அந்த “இசத்தில்” இருக்கும் தவறு என்ன?
சிவப்புச் சட்டை போடுபவன் கம்யூனிஸ்ட் என்பார்கள். இன்று இந்தக் கூட்டத்தினார் சிவப்புச் சட்டை அணிந்து கொண்டு பவனி வருகின்றனர். இவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட்டாக மாறி விட்டார்களா? இது மக்களை மிரட்டிப் பணிய வைக்கும் பண்பாடு.
உண்மையில், அன்வாரும் நஜிப்பும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். தற்போது அவர்கள் வெவ்வேறு குட்டையில் இருப்பதற்கு காரணம் அவர்களுடைய சுயநலன்கள். இன, சமய பேதமற்ற பிஎஸ்எம்மை அணைத்துக் கொண்டு வளரவிட்டால் அது அவர்களின் உண்மையான அடையாளத்தை வெளிச்சம் போட்டு காட்டிக் கொடுத்து விடும் என்ற அச்சம் அவர்களின் உள்ளத்தில் உறைந்து கிடக்கிறது. அவர்களுக்கு வேண்டும் போது பயன்படுத்திக் கொண்டு வேண்டாத போது உதறித்தள்ளி விடுவார்கள். ஆகவே, பிஎஸ்எம் தனித்துப் பயணிக்க வேண்டியிருக்கும். இப்போது அது அக்கட்டத்தில் இருக்கிறது. கொள்ளைக்காரவாதிகள் ஏற்க மறுக்கும் அதன் “முஷ்டி” சின்னத்தின் கீழ் அக்கட்சி தேர்தல் களத்தில் இப்போது இறங்கியுள்ளது.
அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்ற டாக்டரான ஜெயகுமார் பிஎஸ்எம்மை தோற்றுவித்து அது வளர்ச்சியடைய பாடுபட்டவர்களில் ஒருவர். 1999 மற்றும் 2003 பொதுத் தேர்தல்களில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டாலும் அவர் அத்தொகுதி மக்களுக்குத் தொடர்ந்து அவரது சேவையை வழங்கினார்.
நீண்டகாலமாக அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தவர் மஇகாவின் தலைவர் ச. சாமிவேலு. இராணுவமே வந்தாலும் தம்மைத் தோற்கடிக்க முடியாது மார்தட்டிய அவரை 2008 ஆண்டு பொதுத் தேர்தலில் தோற்கடித்து ஜெயகுமார் பிஎஸ்எம்மின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாத்தைப் படைத்தார். 2013 இல், மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார். அப்பழுக்கற்ற முறையில் அவர் சேவையாற்றினார். வருடம் தோறும் தவறாமல் தமது சொத்து விபரங்கள் அடங்கிய அறிக்கையை சத்தியப் பிரமாணம் செய்து அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கிய அத்தொகுதி மக்களிடம் சமர்ப்பித்தார். ஊழலை ஒழித்துக் கட்ட அவர் வழி காட்டினார். மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரது வழிகாட்டலை ஏன் பின்பற்றக்கூடாது என்று குரல் எழுந்தது. அது பிஎஸ்எம்மின் வளர்ச்சியைப் பறைசாற்றியது.
14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட பிஎஸ்எம் அதன் சொந்த சின்னத்தைப் பயன்படுத்த விரும்பியது. அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பிஎஸ்எம் அதன் சொந்த சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டால் அது அக்கட்சியின் தனித்தன்மைக்கு அங்கீகாரமாக அமையும். அதை ஜீரணிக்க முடியாத ஹரப்பான் கூட்டணி அகோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. ஜெயகுமார் தனித்து விடப்பட்டுள்ளார். தனி மரம் தோப்பாகது என்பார்கள். ஆனால், ஜெயக்குமார் என்ற தனி மரம் பிஎஸ்எம் என்ற தோப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அதற்கு அவரது கட்சித் தோழர்களும் தனி மரமாக நின்று தோப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சுங்கை சிப்புட் தொகுதி மக்களுக்கு ஜெயகுமார் ஆற்றிய சேவை பற்றி நன்கு தெரியும். அதைப் பாராட்டுகின்றனர். ஆனால், அத்தொகுதியில் மேம்பாட்டுத் திட்டங்கள் ஏதும் இல்லை என்ற குறைபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அங்கு போதுமான மேம்பாட்டுத் திட்டங்கள் அமலாக்கப்படவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு – ஜெயக்குமாரா அல்லது அரசாங்கமா? மேம்பாட்டு திட்டங்கள் வேண்டுமென்று அவர் கேட்கவில்லையா? அவர் நடவடிக்கை எடுக்கவில்லையா? அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடரவில்லையா?
பாரிசான் வசம் இருக்கும் தொகுதிகளின் மேம்பாட்டிற்கு அளிக்கப்படும் பணம் அரசாங்கப் பணம், மக்களின் பணம். எதிர்க்கட்சிகளின் வசமிருக்கும் தொகுதிகளுக்கும் அரசாங்கப் பணம் கொடுக்கப்பட வேண்டும். பிஎஸ்எம் அதன் தேர்தல் அறிக்கையில் இதற்கான கொள்கையை அறிவித்துள்ளது. அரசாங்கம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்து திட்டங்களைத் தீட்டி அவற்றை அமல்படுத்த நிதி வழங்க வேண்டும். அதற்காக மக்கள் போராட வேண்டும்.
14 ஆவது பொதுத் தேர்தலில் ஜெயக்குமாரை எதிர்த்து நிற்கும், வெற்றி பெறத் துடிக்கும் எஸ். கே. தேவமணி அவரது சொத்து விபரங்களை என்றாவது பகிரங்கமாக பொதுமக்களிடம் தெரிவித்துள்ளாரா? அல்லது, அவரது தலைவர் நஜிப் ரசாக்கிடம் கொடுத்துள்ளாரா? அதன் நகல் ஒன்றை எடுத்து உடனடியாக சுங்கை சிப்புட் தொகுதி மக்களிடம் பகிரங்கமாக தாக்கல் செய்வாரா? தேவமணிக்காகவும் இதர வேட்பாளர்களுக்காகவும் அத்தொகுதியில் பிரச்சாரம் செய்ய வரும் பிஎன், பக்கத்தான் ஹரப்பான் மற்றும் பாஸ் தலைவர்கள் தங்களுடைய சொத்துகளைப் பகிரங்கமாக அறிவிக்கும் ஆவணங்களை அத்தொகுதி மக்களுக்கு காட்டுவார்களா? சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். இல்லையேல், அப்படிப்பட்ட குப்பைகள் போட வேண்டிய இடத்தில் போடப்பட வேண்டும்.
கடந்த 10 ஆண்டு காலத்தில், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் ஜெயக்குமார் நன்னெறி தவறாமல், பொதுச் சொத்தை கொள்ளையடிக்காமல் அத்தொகுதி மக்களுக்கு நற்சேவை ஆற்றியுள்ளார் என்பது மனச்சாட்சியுடையவர்களுக்கு நன்கு தெரியும். “முஷ்டி”யின் வெற்றியில் ஏழைகளின் எதிர்காலம் குடிகொண்டிருக்கிறது.