பக்கத்தான் ஹரப்பான் 1எம்டிபியை மையப்படுத்தியே அதன் தேர்தல் பரப்புரைகளைச் செய்து வருகிறது. நகர்ப்புறங்களில் அதன் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள அவ்விவகாரம் உதவியும் வருகிறது. ஆனால், கிராமப்புறங்களில் அது பலிக்காது.
1எம்டிபி விவகாரம் குறித்து கிராமப்புற மக்களிடம் பேசுவது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உலகின் மிகப் பெரிய ஊழல் என்று கூறப்பட்டுள்ள அவ்விவகாரம் அவர்களுக்குப் “புரியாது” என ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் மலேசியாகினியின் நேர்காணல் ஒன்றில் கூறினார்.
“கிராமப்புற மக்களுக்கு அது புரியாது……ரிம1 பில்லியன் என்பதைக் கூட அறியமாட்டார்கள். அது எவ்வளவு என்றுதான் கேட்பார்கள். அவர்களுக்கு ரிம1 மில்லியனும் ரிம1பில்லியனும் ஒன்றுதான்.
“பிரதமர் திருடுகிறார் என்றால் பிரதமராக இருப்பவர்கள், நான் உள்பட, பணம் திருடத்தான் செய்வார்கள் என்றவர்கள் நினைக்கிறார்கள்.
“ஒரு கம்பத்துக்குப் போய் நஜிப் ரிம42 பில்லியனைத் திருடி விட்டார் என்று சொன்னால், அவர்களைப் பொறுத்தவரை ரிம42-உம் ரிம42 பில்லியனும் ஒன்றுதான்”.
அதனால்தான் ஹரப்பான் மலாய் இருதயப்பகுதிகளாகக் கருதப்படும் இடங்களில் உள்ள வாக்காளர்களைக் கவர வேறொரு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக தெரிவித்தார் மகாதிர்.
“கிராமப்புறங்களில் வாழ்க்கைச் செலவினம் உயர்ந்து வருவது பற்றிப் பேசினால் புரிந்து கொள்வார்கள்.
“மூன்று வேளை சாப்பிட்டு வந்த சிலர் இப்போது இரண்டு வேளைகள் மட்டுமே சாப்பிடுகின்றனர். இன்னும் சிலர் ஒரு வேளை மட்டுமே. அது ஏன் என்பது அவர்களுக்குப் புரிகிறது.
“முன்பு அரசாங்கம் உதவிச் சம்பளங்களை வாரி வழங்கியது. தேர்வில் தோற்றுப் போனவர்களுக்குக் கூட உதவிச் சம்பளங்கள் வழங்கப்பட்டன.
“பலர் நல்லவிதமாக படித்துத் தேறினர். இப்போது நிபுணர்களாக உள்ளனர்.
“அதனால் அவர்கள் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்கிறார்கள். ஏனென்றால் ஒரு மலாய்க்காரருக்கு அவரின் பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்பி மருத்துவம் படிக்க வைப்பது இயலாத காரியம்…….கட்டுப்படி ஆகாது”, என்றவர் சொன்னார்.
நீண்டகாலமாக அம்னோவின் கோட்டைகளாக திகழும் கிராமப்புறங்களில் ஹரப்பானுக்காக பரப்புரைகளில் ஈடுபடும் பொறுப்பை பெர்சத்து, பிகேஆர், அமனா ஆகியவை மேற்கொண்டு வருகின்றன. நகர்ப்புறங்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு டிஏபி-இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவின உயர்வைக் கட்டுப்படுத்த மற்றவற்றோடு ஜிஎஸ்டி ஒழிக்கப்படும் என்று ஹரப்பான் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
பிஎன்னும் சளைக்கவில்லை. அதுவும் அதன் தேர்தல் அறிக்கையில் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி கூறியுள்ளது.