முன்னாள் அமைச்சர் சைட் ஹமிட் அல்பார் மலேசியர்களுக்கு எழுதிய திறந்த மடல் பிஎன்னுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதமாக அர்த்தப்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பது கண்டு குழம்பிப் போயுள்ளார்.
“நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை, ஜனநாயகத்தை, சுதந்திரமாக நடக்கும் தேர்தல்களை ஆதரிப்பதாக. ஆனால், பிஎன்னை ஆதரிப்பதாகக் கூறவில்லை”, என அவர் இன்று காலை டிவிட் செய்திருந்தார்.
சைட் ஹமிட், அவர் புகழ்தேடப் பார்ப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்த இன்னொரு டிவிட்டர் பதிவாளருக்கும் பதிலளித்திருந்தார்.
“நண்பா, இந்த வயதில் புகழ்தேடும் ஆசை இல்லை. அது போதுமான அளவுக்கு இருக்கிறது.
“நேர்மையும் மரியாதையும் கொண்ட ஐக்கியமான நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் என் கவலை. நான் நாட்டை நேசிக்கிறேன்”, என்றாரவர்.
அவரது கடிதம் பிஎன்னுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியவர் யார் என்பதை சைட் ஹமிட் அல்பார் குறிப்பிடவில்லை.
சைட் ஹமிட், மலேசியர்கள் ஆட்சியில் உள்ளவர்களை மதிக்க வேண்டும் என்றும் ஆனால், அஞ்ச வேண்டியதில்லை என்றும் கூறினார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் மாற்றத்தை ஏற்படுத்தும் இயக்கத்துக்கு ஆதரவு கொடுக்க முன்வந்துள்ள அம்னோ மூத்தத் தலைவர்கல் வரிசையில் இப்போது சைட் ஹமிட் அல்பாரும் சேர்ந்து கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே, ரபிடா அசீஸ், டயிம் சைனுடின், ரயிஸ் யாத்திம் ஆகியோர் வெளிப்படையாகவே மகாதிருக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.