மலாய் சுனாமி என்பதெல்லாம் இல்லை என்று பராமரிப்பு பிரதமர் நஜிப் ரசாக் கூறினார். நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பக்கத்தான் ஹரப்பான் கூட்டங்களில் பங்கேற்றவர்கள் எல்லாம் டிஎபி ஆதரவாளர்கள் மட்டுமே என்று அவர் மேலும் கூறினார்.
நகர்புறங்களில் நடக்கும் எதிரணியினரின் செராமாவில் கலந்துகொள்பவர்கள் மலாய்க்காரர்கள் அல்லர். பெரும்பாலானோர் டிஎபி ஆதரவாளர்கள் என்று டிவி3 இல் இன்றிரவு நடைபெற்ற ஒரு நேரடி நேர்காணலில் நஜிப் கூறினார்.
ஹரப்பான் கூட்டங்களுக்கு வெளியே இருக்கும் ஆதரவாளர்கள் பஸ்களில் கொண்டுவரப்படுகின்றனர் என்று நஜிப் மீண்டும் கூறினார்.
என்னுடைய கூட்டங்களுக்கு பெரும் கூட்டமான மக்கள் தேவையில்லை… உள்ளூர்காரர்கள் 10,000 பேர்கள் போதும், வெளியிடங்களில் இருந்து 20,000 பேர்கள் தேவையில்லை என்று கூறியிருக்கிறேன் என்று நஜிப் கூறினார்.
பிஎன்-னுக்கான ஆதரவு இன்னும் முழுமையாக இருக்கிறதை நான் வருகை அளிக்கும் இடங்களில் பார்க்கிறேன். எனது துணை மற்றும் மூத்த அமைச்சர்களின் அறிக்கைகளும் அதைத்தான் கூறுகின்றன. நான் உண்மையான சூழ்நிலையைக் காண்கின்றேன்.
“எங்களுடைய வலிமை எங்கே இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அவ்வாறே எங்களுடைய பலவீனம் எங்கே இருக்கிறது என்பதும் எங்களுக்குத் தெரியும்”, என்று அவர் மேலும் கூறினார்.
தேர்தல் பிரச்சாரம் நாளையோடு முடிவடைகிறது. புதன்கிழமை வாக்களிப்பு நடைபெறும்.