சுரேஸ் குமார், 42, கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர்.
கேமரன் மலை, தானா ராத்தாவில் பிறந்து, அங்கேயே வாழ்ந்து வருகிறார். அமைதியானவர், ஆனால் கொண்ட கொள்கையில் இறுக்கமானவர், கடந்த 14 ஆண்டுகளாக, பல போராட்டாங்களுக்கு இடையே, சற்றும் சளைக்காமல் கேமரன் வாழ் மக்களுக்குப் பல சேவைகளை ஆற்றிவந்ததன் காரணமாக, அங்குள்ளவர்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர்.
இன, மத பேதமின்றி, நாங்கள் சந்தித்தவர்களில் பெரும்பான்மையினர், “சுரேஸ்-ஐ நன்றாகத் தெரியும்”, “சுரேஸ் சார் எங்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்” , “எங்கள் வீட்டில் அனைவரும் அவருக்குதான் சப்போர்ட்” (ஆதரவு), “என் ஓட்டு அவருக்குதான்” என்றெல்லாம் புகழாரம் சூட்டிய வேளை, ஒருசிலர் முகம் சுழித்தும் பதிலளித்தனர்.
காரணம், பக்காத்தான் ஹராப்பானுக்கான வாக்குகள் சிதறிப்போகும் என்பதே.
கேமரன் மலையில் பிறந்து, அங்கேயே வசித்துவரும் ஒரு பெரியவர் சொன்னார், “பி.எஸ்.எம். ஹராப்பானோடு பேசி இருக்க வேண்டும், இது வீணான செயல், பாரிசானுக்குத்தான் இலாபம்,” என்று
அவரிடம் பி.எஸ்.எம். தரப்பு நியாயங்கள் சிலவற்றை முன்வைத்தபோது, “எல்லாம் சரிதான், ஆனால், கண்டிப்பாக சுரேஸ் வெற்றிபெறுவது சற்று சிரமம்தான்,” என்றார்.
பூர்வக்குடி மக்களின் வாக்குகள்
மேலும், “இதுவரைக்கும் எவ்வளவு வேலை செய்தாங்கன்றதவிட, அடுத்த 11 நாட்கள் எப்படி வேலை செய்றாங்கன்றதுதான் முக்கியம். குறிப்பா, அஸ்லிகாரங்கள ‘கௌதிம்’ பன்னா போதும், ஓட்டெல்லாம் தானா வந்துடும்,” என்றார் புன்னகையோடு.
“அவுங்க எல்லாம், அஸ்லிகாரங்க கம்பத்துல போயி அங்கயே தங்கிடுவாங்க, தெனைக்கும் விருந்து, கலைநிகழ்ச்சி, எல்லாம் உண்டு. பிறகு எப்படி இவுங்க ஜெயிக்கிறது?” என்றார் அந்தப் பெரியவர்.
கேமரன் மலையில் பூர்வக்குடியினரின் வாக்குகள் ஒருவரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவு பலம் வாய்ந்தவை. மலாய்க்காரர் (33.5%), சீனருக்கு (29.5%) அடுத்து பூர்வக்குடியினர் 21.6 விழுக்காட்டினர், இவர்களுக்கு அடுத்த நிலையில்தான் இந்தியர்கள், 14.9 விழுக்காட்டினர்.
ஒரு பூர்வக்குடியினர் கிராமத்தில், சுரேஸ் தன் சகாக்களோடு ஊன்றிச் சென்ற கொடிகள், பதாகைகள், போஸ்டர்கள் அனைத்தும், சிறிது நேரத்திலேயே கிழித்தெறிந்து, எரியூட்டப்பட்டன. ஜெலாய் சட்டமன்ற பி.எஸ்.எம். வேட்பாளர், மாட் நோர் அயாட், பூர்வக்குடியைச் சேர்ந்தவர், அவருக்கும் அந்தக் கிராமத்தில் அதே கதிதான். ஆனால், பெரும்பாலான கிராமங்களில் இவர்களுக்கு நல்ல வரவேற்பு, காரணம் அம்மக்களுக்கு இவர்கள் செய்த உதவிகள்.
முன்னாள் வேட்பாளர்
இதற்கிடையே, “கடந்த முறை தோற்றுப்போன பிறகு மலையிலிருந்து இறங்கிய பக்காத்தான் ரக்யாட் (ஹராப்பான்) வேட்பாளர், இந்தத் தேர்தலுக்குதான் மலை ஏறி உள்ளதாக மக்கள் குறைபட்டு கொள்கின்றனர்,” என்று நாங்கள் கூறியதற்கு, “யார்தான் இங்க வேலை செய்யரது? ஒருத்தரும் இல்ல, அந்த சுரேஸ் மட்டுந்தான் இங்கயே இருந்து, நிலப் பிரச்சனை, வீட்டு பிரச்சனை, ‘டிராஃபிக் ஜேம்’ (வாகன நெரிசல்) பிரச்சனைனு எல்லாத்தையும் செய்ராரு.”
அப்போ அவர்தானே சிறந்த வேட்பாளர், என்று கேட்டதற்கு, “இங்க பாருங்க, அவரு என்னதான் வேலய போட்டாலும், பி.என்.காரங்க எதயாச்சும் கொடுத்து ஜெயிச்சிருவாங்க. இந்தவாட்டி, நாம அரசாங்கத்த மாத்தனும், இப்படி எதிர்க்கட்சிக்குள்ள அடிச்சிக்கிட்டா அது அவங்களுக்குதான் இலாபம். வேலையே செய்யாத அவுங்க சுலபமா ஜெயிக்க போறாங்க, நாம வேலயயும் போட்டு, பணத்தையும் போட்டு, எல்லாத்தையும் விட்டுட்டு இருக்கப்போறோம்.”
இப்படியாக அந்தப் பெரியவரைப் போல் சிலர் குறைபட்டுக்கொள்ள, சற்றும் மனந்தளராமல் சுரேஸ் குமார் தனது தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.
சுரேஸ் குமாரின் 10 அம்ச தேர்தல் அறிக்கை
இம்முறை, பி.எஸ்.எம். சின்னத்தில் போட்டியிட கட்சி முடிவெடுத்தபோது, கேமரன் வாழ் மக்களுக்காக பிரத்தியேகமாக 10 அம்ச தேர்தல் அறிக்கை ஒன்றை சுரேஸ் தயாரித்திருக்கிறார்.
அதுபற்றி கேட்டபோது, “கடந்த 14 வருடங்களாக, கேமரன் மக்களின் பிரச்சனைகளை நான் கையாண்டு வருகிறேன், அவர்கள் எந்த மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆக, இத்தொகுதி வேட்பாளராக இருக்கும் நான், இங்குள்ள மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதே முக்கியம் எனக் கருதி இந்த 10 அம்சத் தேர்தல் அறிக்கையை முன்வைக்கிறேன்.”
“பி.என். வேட்பாளர் சிவராஜ் தேசியத்தின் தேர்தல் அறிக்கை திட்டங்களை இங்குள்ள மக்களுக்கு கொண்டுவந்துள்ளார், அது எந்த அளவுக்கு கேமரன் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் என்று எனக்குத் தெரியவில்லை,” என்றும் சுரேஸ் சொன்னார்.
கேமரன் மக்களுக்கான 10 அம்ச தேர்தல் அறிக்கை:-
- கேமரன் சிறு தோட்ட விவசாயிகளுக்கு நிரந்தர நிலப்பட்டா
- கேமரன் மாவட்ட மன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க, உள்ளூராட்சி தேர்தலை மீண்டும் நடைமுறைபடுத்துதல்
- கேமரன் நாடாளுமன்றத் தொகுதியில், மக்கள் பிரதிநிதித்துவ மன்றத்தை (எம்.பி.ஆர்.) சுமார் 80 இடங்களில் உருவாக்குதல்
- மக்கள் ஆதரவோடு, கேமரன் மலையில் ‘டிராஃபிக்’ அமைப்பு முறையில் மாற்றம் ஏற்படுத்துதல்
- வசதிக்குட்பட்ட வீடு செயலவை (ஜே.ஆர்.எம்.) வழி, பி40 குடும்பங்கள் முதல் வீடு பெற போராடுதல்
- ஃபெல்டா குடியேற்றவாசிகள் செயலவை (ஜே.பி.ஃப்.) அமைத்து, ஜெலாய் தொகுதி ஃபெல்டா குடியேற்றவாசிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுதல்
- ஜெலாய் தொகுதியில், இரப்பர் சிறு தோட்டக்காரர்களுக்கு நிலப்பட்டா கிடைக்கப் போராடுதல்
- புறநகர்ப்பகுதியில் ஏழ்மையை ஒழிக்க, இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல்
- காட்டையும் பூர்வக்குடியினரின் பாரம்பரிய நிலத்தையும் அழிக்கும் மெகா திட்டங்களை எதிர்த்துப் போராட, பூர்வக்குடியினருக்கு உதவுதல்
- பூர்வக் குடியினர் கம்பங்கள் மற்றும் போஸ்களில் நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, ‘சமூக வரைபடம்’ (அவர்களின் பாரம்பரிய நிலங்களை அடையாளங்காண) உருவாக்க உதவுதல்
“இப்படியாக, கேமரன் மலை நாடாளுமன்றத்தில் இருக்கும் ஜெலாய், தானா ராத்தா சட்டமன்றத் தொகுதி மக்களுக்கான 10 திட்டங்களை முன்னெடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்பதால்,” என்றார் சுரேஸ்.
எங்கள் ஆதரவு பக்காத்தான் ஹராப்பானுக்கே
“இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், கண்டிப்பாக பக்காத்தான் ஹராப்பானுக்குதான் எங்கள் ஆதரவு. நிச்சயம் பி.என். கூட்டணியில் நாங்கள் இணையமாட்டோம். மாநிலம் அல்லது மத்திய அரசாங்கத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும், எங்கள் பணி தொடரும்.
“இனிமேல்தான் புதிதாக ஆட்சி அமைக்கவுள்ளவர்கள் போல தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், இதனை செய்வேன், அதனை செய்வேன் என்கின்றார் பி.என். வேட்பாளர். கடந்த காலங்களில், இத்தொகுதியை வென்றெடுத்த போது, இவர்கள் என்ன செய்தார்கள், அந்தத் திட்டங்களையெல்லாம் ஏன் இதுவரை செய்யவில்லை,” என்றும் சுரேஸ் கேள்வி எழுப்பினார்.
கேமரன் மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்?
கேமரன் மலை வாக்காளர்கள் ஏன் உங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்
று கேட்டபோது, சற்றும் யோசிக்காமல், “காரணம் நான் உள்ளூர் மக்களில் ஒருவன், இங்குள்ள மக்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்தவன்,” என்றார் சுரேஸ்.
“அதுமட்டுமின்றி, பி.எஸ்.எம்.-இன் கொள்கை மக்கள் சார்ந்த அரசியல், எனவே நான் அரசியலையும் ஜனநாயகத்தையும் மீண்டும் மக்களிடமே கொண்டுசெல்ல விரும்புகிறேன். மக்களும் இதைத்தான் இப்போது விரும்புகிறார்.
“எங்களுக்கு ஓட்டுபோடுங்க, மத்திய அரசாங்கத்தை நாம் மாற்றுவோம், என்பது மட்டும்தான் ஹராப்பான் வேட்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இவர்களிடம் இத்தொகுதி மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை.
“நான், மக்கள் சேவை மையத்தை அமைத்து, இங்கு தொடர்ந்து பணிசெய்து வருகிறேன். சிவராஜ் (பி.என்.) இப்போதுதான் அலுவலகம் திறந்து 2 மாதங்கள் ஆகின்றன, மனோகரனுக்கு (ஹராப்பான்) அலுவலகம் எதுவுமே இல்லை. ஆக, இவர்கள் இங்
கு திட்டமிட்டு வேலைகளைத் தொடங்குவதற்குள் 5 ஆண்டுகள் முடிந்துவிடும்.
“ஆனால், நான் அப்படியல்ல, எனது பணிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு, செயலில் உள்ளன, அதனைத் தொடர்ந்து செய்து மக்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்பேன்,” என்றார் சுரேஸ்.
என் அரசியல் ஆசான் டாக்டர் ஜெயக்குமார்
அரசியலில் அவருக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது என்று கேட்டபோது, “அரசியலில் இப்படியும் ஒருவர் இருக்கிறாரா என்று என்னை வியக்க வைத்தவர், டாக்டர் ஜெயக்குமார். அவர்தான் என் அரசியல் ஆர்வத்திற்கு வித்திட்டவர், என்னுடைய ‘ரோல் மோடல்’, என்று சுங்கை சிப்புட் முன்னாள் எம்பி-யை சுரேஸ் குறிப்பிட்டார்.
“நான் பார்த்த அரசியல்வாதிகள் எல்லாருமே மோசமானவர்கள்தான், புத்தகத்தில்தான் நல்ல நல்ல அரசியல் தலைவர்கள் அறிஞர் அண்ணா, காமராஜர் இவர்களைப் பற்றியெல்லாம் படித்திருக்கிறேன், ஆனால் பி.எஸ்.எம். கட்சியில் சேர்ந்த பிறகு, டாக்டர் நசீர், அருட்செல்வன், செல்வம், ராணி போன்ற உண்மையான தலைவர்களைப் பார்த்தேன், அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.”
ஏன் பி.எஸ்.எம். எனது தேர்வானது?
நாட்டில் பெரிய கட்சிகள் பல இருக்கும் போது, ஓர் ஆர்வமான இளைஞர், ஏன் இந்த சிறிய கட்சியைத் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வியையும் நாங்கள் அவரிடம் வைத்தோம்.
“நான் நினைக்கிறேன், நான் ரொம்ப அதிர்ஸ்டசாலி என்று, நான் தேர்ந்தெடுத்த முதல் கட்சி பி.எஸ்.எம். , அதுவே எனது இறுதி கட்சியாகவும் இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்,” என்றார் சுரேஸ்.
“மக்கள் சார்ந்த திட்டங்கள் இல்லாத கட்சிகளே இன்று நம்மிடையே அதிகம். நேர்மையற்ற அரசியல் தலைவர்கள், சுயநலவாதிகள் – தனிநபராகட்டும் , தான் சார்ந்த கட்சியாகட்டும் – தலைவர் துதிபாடுதல் இவையெல்லாம் பி.எஸ்.எம்.-இல் இல்லை.
“பி.எஸ்.எம். கட்சியில் முதலில் நான் பார்த்தது ஜனநாயக முறையில் ஒரு பிரச்சனையை அணுகும் முறைமை, தலைவர் ஒருவரின் கருத்துக்குத் தலையாட்டாமல், அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது, என்னை உண்மையிலேயே வியப்பில் ஆழ்த்தியது.
“எல்லாரும் பேசலாம், எல்லாரும் கருத்து தெரிவிக்கலாம், கடைசியில் பெறும்பான்மையினரின் கருத்தே முடிவாக எடுத்துகொள்ளப்படும், இந்த அனுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
“கேமரன் மலையில் நான் சுதந்திரமாக செயல்பட பி.எஸ்.எம். தடைசெய்ததில்லை, எனது திட்டங்களை நான் முழு சுதந்திரத்துடன் முன்னெடுத்தேன், சில சிக்கல்கள் வந்தபோது பி.எஸ்.எம். தலைவர்கள் எனக்கு வழிகாட்டி, ஒத்துழைத்தார்கள். ஆக, இது ஓர் ஆரோக்கியமான குடும்பம்போல், என் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இல்லாமல், அனைத்திலும் தோள் கொடுத்தே வந்துள்ள கட்சி.
“ஆக, நான் இந்தக் கட்சியில் சேர்ந்ததற்கு பெருமை கொள்கிறேன், உண்மையில் நான் ஓர் அதிர்ஸ்டசாலி,” என்று சுரேஸ் நம்மிடம் பெருமைபட கூறினார்.
எங்களுக்கு வாய்ப்பளித்தால்…
“ஆக, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நலனைப் பாதுகாக்க நாங்கள் சிறந்த திட்டங்களை வைத்துள்ளோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பளித்தால், நிச்சயம் அவற்றை முன்னெடுபோம்,” என்றார் சுரேஸ்.
நாளை மறுநாள், 14-வது பொதுத் தேர்தல், நீண்டகால நன்மையைச் சீர்தூக்கிப் பார்த்து, தங்கள் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க, பி.எஸ்.எம். வேட்பாளர், மண்ணின் மைந்தன், சுரேஸ்குமாருக்குக் கேமரன் மலை வாக்காளர்கள் ஒரு வாய்ப்பளிப்பார்களா? விவேகமாக சிந்தித்து வாக்களிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!