நாட்டை நல்ல நிலைமைக்கு கொண்டுவர பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிரின் முயற்சிகளுக்கு மலேசியர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.
செராஸ் மறுவாழ்வு மையத்தில் சிகிட்சை பெற்று வரும் அன்வார், 14 ஆவது பொதுத் தேர்தல் வழி மாற்றங்கள் கோருவதற்கு மக்கள் இயக்கத்தோடு இணைந்திருக்குமாறு மலேசியர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
அம்னோவும் பிஎன்-னும் மகாதிருக்கு தாம் அளிக்கு ஒத்துழைப்பு குறித்து கலக்கமுற்றுள்ளனர். நான் மகாதிரை தாக்கி பேசிய பேச்சுகளை மீண்டும் ஒலி பரப்பியுள்ளனர்.
தொடக்கத்தில் தமது குடும்பம் அந்த முன்னாள் பிரதமர் பற்றி எச்சரிக்கையுடன் இருந்தது என்பதை ஒப்புக்கொண்ட அன்வார், அவர்கள் நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க முடிவெடுத்தனர் என்றார்.
மகாதிர் அவரது கடந்தகால குறைபாடுகளை ஏற்றுக்கொண்டு, மன்னிப்பு கோரியுள்ளதோடு மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் அவரது நேரத்தையும் சக்தியையும் தியாகம் செய்துள்ளார்.
அம்னோ மற்றும் பிஎன் அவருக்கு எதிராகக் கூறிய அவமதிப்புகளை அவர் அமைதியாக ஏற்றுக்கொண்டு ஹரப்பான் இயந்திரங்களை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினார் என்று அன்வார் மேலும் கூறினார்.
நஜிப் ரசாக்கின் தலைமையில் அம்னோ-பின் அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகியவற்றால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள சீரழிவைச் சரிகட்டுவதற்கு மகாதிருக்கு ஆதரவு அளிக்க மக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று அன்வார் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
டிஎபி மலாய்க்காரர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் என்ற அம்னோவின் அச்சமூட்டும் கூற்றை அவர் சாடினார்.
1எம்டிபி மற்றும் பெல்டா ஊழல்கள், ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவற்றுக்குப் பதில் கூற முடியாத அம்னோ-பிஎன் இனவாத உணர்ச்சிகளைத் தூண்டி விடுகிறது என்றும் அன்வார் கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள் என்று கூறிய அன்வார், பணம், பணம் படைத்த முதலாளிகள் அல்லது அவதூறு பரப்புரைகள் அந்த முடிவை மாற்ற முடியாது என்றார்.
“இன்னும் 24 மணி நேரத்தில், இந்நாட்டின் எதிர்காலம் மற்றும் நமது நமக்களின் தலைவிதி உங்கள் கையில் இருக்கின்றன.
“விவேகமாகவும் பொறுப்புடனும் வாக்களியுங்கள்”, என்று கூறுகிறார் அன்வார்.
தற்போது சிறையில் இருக்கும் அன்வார் அடுத்த மாதம் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.