நம் சமுதாயத்தின் மீது சரமாரியாக இழிவுப்படுத்தும் சொற்களை விடுத்தபோது மனம் குமுறி நின்றோம். கேட்பார் யாரும் இல்லையா என்று ஏக்கம் நம்மை வருத்தியது. அதிகார பலத்தை வெளிப்படுத்தத் தயங்காதவர்கள் – கண்களை மூடிக்கொண்டிருந்த காளைபோல் நடந்துகொண்டார்கள். அப்படிப்பட்ட தரத்தைக் கொண்டவர்கள் இனிமேல் அவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள் என்பதற்கான அறிகுறிகள் ஏதாவது தென்படுகிறதா? இல்லை! அவர்கள் மனப்பூர்வமான நினைப்பு என்ன? நடந்தது நடந்துவிட்டது. அதைப் பற்றி ஒன்றும் செய்யமுடியாது. காயமடைந்த மனப்புண்ணுக்கு புனுகு தடவுவதுபோல் கொஞ்சம் பணத்தினைக் கொடுப்போம். சில சலுகைகளைத் தருவதாகச் சொல்லுவோம். தமிழ் சமுதாயம் கொடுத்ததை பெற்றுக்கொண்டு திருப்தி அடையும் சமுதாயம்;
ஆனால், அவர்களின் தலைவர்களைத்தான் திருப்தி படுத்த முடியாது. உதாரணத்திற்கு பாதிப்புற்றிருக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்குச் சேர வேண்டியவற்றை மேல்மட்டத்தில் இருந்து சாதாரண தலைவர்கள் வரை ஏழைத் தமிழர்களை ஏமாற்றுவதில்தான் கவனம் என்ற கருத்து பரவலாகவே உள்ளது. இந்தத் தலைவர்கள் என்ன செய்கிறார்கள்? தமிழர்களின், பொதுவாக இந்தியர்களின, வாக்குகளைக் கணக்கில் கொண்டு அதை வாக்கு வங்கியாக மாற்றி இந்தியர்களைப் பிரதிநிதிப்பதாகச் சொல்லுவார்கள். மற்ற கட்சிகளுடன் பேரம் பேசி சொந்த நலனுக்காகப் பயன்படுத்துவார்கள். இந்தியர்களைப் பிரதிநிதிப்பதாகச் சொல்லித் திரியும் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் சுயநலத்துக்காக இந்திய வாக்காளர்களை பயன்படுத்துகிறார்கள் என்ற கடுமையான குற்றச்சாட்டும் பரவிக்கொண்டிருக்கிறது. அதுதான் உண்மை.
இந்த நிலையில் இருந்து ஒரு மாற்றத்தைக் காண வேண்டும். எப்படிப்பட்ட மாற்றம்? எல்லா மலேசியர்களும், இன, மத வேறுபாடு இல்லாமல் வாழ்வதற்கு ஏதுவாகப் பொருளாதாரத் திட்டங்களை அமல்படுத்தவேண்டும். இங்கு வாழும் மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் சாபா சரவாக் பூர்வீக குடிமக்கள் யாவரும் மலேசியர்கள்; அவர்கள் அனைவருக்கும், நம் நாட்டின் நலனில், அதன் எதிர்காலத்தில் பங்கு உண்டு. அது குறித்து சிந்திக்கும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு.
நம் பிள்ளைகள் வெளிநாடுகளுக்குப் போய் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற நிலை இனியும் இருக்கக்கூடாது. காரணம், வெளிநாடுகளுக்குப் போகும் நம் பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள், கடுமையானச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இது தேவை இல்லை. இந்த நாட்டிலேயே உழைப்புக்கு நல்ல, தகுந்த ஊதியம் வழங்குவதற்குத் திட்டங்களை வகுத்து அமல்படுத்தினால் அதுவே போதும்.
நல்ல வருமானத்திற்காகச் சிங்கப்பூருக்குப் போகும் நம் மக்கள் எப்படிப்பட்ட சங்கடங்களை அனுபவிக்கிறார்கள்? நிம்மதி, மகிழ்வான வாழ்க்கையை அனுபவிக்கிறார்களா? கிடையவே கிடையாது. காலையில் வேலைக்குப் போக வேண்டுமானால் விடியற்காலையில் மூன்று, நான்கு மணிவாக்கில் எழ வேண்டும். பிள்ளைகள் தூங்கிக்கொண்டிருப்பார்கள். வாகன நெரிசல், மோட்டார் சைக்கிள்கள் உமிழும் புகை, அதுவும் அவர்களின் சுகாதாரத்தைப் பாதிக்கிறது. இதைப் பற்றி எல்லாம் சிந்திக்கிறார்களா? கிடையாது. இதற்கும் பரிகாரம் காணவேண்டும்.
மக்களின் நலனில் இம்மியும் ஆர்வம் காட்டாதவர்கள்தான் நம்மை கட்டுப்படுத்துகிறார்கள். நமது உரிமைகளைப் பேரம் பேசி நம்மை மேலும் மேலும் அவல நிலைக்குத்தள்ளுகிறார்கள். “பட்டது போதும் மாற்றத்தை காண்போம்” என மக்கள் நினைப்பதும் தவறாகாதே!
எல்லா மலேசியர்களின் நலனில் அக்கறை காட்டுகிறவர்கள்தான் வேண்டும் என்று மக்கள் விரும்புவதைக் காணமுடிகிறது. ஊதாரித்தன செலவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தேசியக் கடன் எகிரிக் கொண்டே போவதைத் தடுக்கவும் நடவடிக்கைகள் தேவை. தேசியக் கடனை கட்டித்தீர்க்கும் பொறுப்பு சாதாரண மலேசியர்கள் மீது விழுகிறது. இப்படிப்பட்ட பாரம் தேவையா?
மலேசியாவில் இயற்கை வளம் நிறைந்து இருக்கிறது. பொருளாதார நிர்வாகம் சரியாக இயங்காததால் நாடு நசிந்துக் கொண்டிருக்கிறது. ஓர் இனத்தின் சலுகைகளைப் பறிக்காமலேயே எல்லா மலேசியர்களுக்கும் சிறப்புமிகு வாழ்க்கையைத் தரமுடியும். உதாரணத்திற்கு, சிங்கப்பூரில் இயற்கை வளம் சுத்தமாகக் கிடையாது, ஆனால் அவர்களின் நிதி நிர்வாகம், ஊழலற்றத் தன்மை, அவர்களின் தேசியக் கடன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது போன்றவை அந்நாட்டின் பொருளாதாரத்தை மெச்சத்தக்க அளவில் வைத்திருக்கிறது. நாம் அவர்களைப் பின்பற்ற வேண்டாம். நமக்கென்று இயற்கை வளம் இருக்கும்போது சிறந்த, நேர்மைமிகு பொருளாதாரக் கொள்கைகளைத் தயாரித்து அமல்படுத்தினால் எல்லா மலேசியர்களும் நிம்மதியாக வாழமுடியும். நம்பிக்கை மிகுந்த எதிர்காலத்தை மக்கள் விரும்புவதை தடுக்க இயலாது. அந்த நம்பிக்கையைத் தருபவர்கள்தான் தேவை.
நல்ல கட்டுரை. காலையிலிருந்து நிறைய புத்திமதிகள், நமது நலனுக்காக! இந்தியர்களைப் பிரதிநிதிக்கிறோம் என்று சொல்லுபவர்களை இந்தத் தேர்தலோடு ஒரு முடிவு கட்ட வேண்டும்!