மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி) , நாளை 14வது பொதுத் தேர்தலில் நாட்டில் உள்ள 14-மில்லியன் தொழிலாளர்களும் பக்கத்தான் ஹரப்பானுக்கே வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
அப்படிச் செய்வது தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆணிவேர் என்பதையும் அவர்களை “என்றென்றும் புறக்கணிக்கக் கூடாது” என்பதையும் வலியுறுத்தும் செய்தியாக அமையும் என எம்டியுசி தலைமைச் செயலாளர் ஜே. சாலமன் ஓர் அறிக்கையில் கூறினார்.
“தொழிலாளர்-எதிர்ப்பு மனப்போக்கையும் கொள்ளையடிக்கும் குணத்தையும் கொண்ட எந்தவோர் அரசாங்கத்தையும் தேர்தலில் தோற்கடிக்கும் ஆற்றல் தொழிலாளர்களுக்கு உண்டு.
“முத்தரப்பையும் கொண்ட அமைப்பில் சரிக்குச் சரியாக மரியாதை கொடுக்கும் அரசாங்கமே எங்களுக்குத் தேவை. அப்போதுதான் நாட்டின் வளத்தில் தொழிலாளர்களும் சமப் பங்கினைப் பெறுவார்கள்”, என்றாரவர்.
சம்பளம் குறைவாக இருக்கிறது அதனால் தொழிலாளர்கள் ஏழைகளாக மாறி வருகிறார்கள். அவர்களின் நிலை, வாழ்க்கைச் செலவு உயர்ந்து வருவதாலும் பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யாலும் மேலும் மோசமடைந்துள்ளது என்றாரவர்.
“தொழிலாளர்களின் சமூக- பொருளாதார நிலை உயர்வதற்குத் தொழிற்சங்கங்கள் தேவை, ஆனால் மலேசியாவில் காலத்துக்கு ஒவ்வாத சட்டங்களைக் கொண்டு அவை அடக்கி ஒடுக்கப்படுகின்றன.
“சட்டங்களைத் திருத்தி அமைக்க நாங்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை, ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்களின் நலன்களுக்குப் பாதிப்பு என்றால் மட்டும் அவர்களின் நலன்காக்க சட்டங்கள் விரைவாகக் கொண்டுவரப்படுகின்றன”, என்று கூறிய சாலமன், பிரதமரும் துணைப் பிரதமரும் தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பில் எம்டியுசி முன்வைத்த கோரிக்கைகளைக் கவனிக்கவே இல்லை என்றார்.