‘ஞாயிறு நக்கீரன், இந்திய பாரம்பரிய வர்த்தகர்களும் தொழில் முனைவர்களும் ஆள்பல பற்றாக் குறையால் மிகவும் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடியான நேரத்தில் தற்பொழுது முப்பதாயிரம் தொழிலாளர்களை வெளிநாட்டில் இருந்து குறிப்பாக இந்தியாவில் இருந்து தருவித்துக் கொள்வதற்காக மத்தியக் கூட்டரசு அனுமதி அளித்துள்ளதற்கு மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம்(பிரிமாஸ்) நன்றி தெரிவித்துக் கொள்வதாக அதன் தலைவர் முத்துசாமி திருமேனி தெரிவித்தார்.
மலேசிய இந்திய ஜவுளிக் கடை சங்கம், மலேசிய இந்திய முடிதிருத்தும் நிலைய உரிமையாளர் சங்கம், மலேசிய இந்திய பொற்கொல்லர்-நகை ஆபரண வணிக சங்கம், மலேசிய இந்திய மளிகைக் கடை உரிமையாளர் சங்கம், முஸ்லிம் மினி மார்க்கெட் உரிமையாளர் சங்கம்(மாவார்) ஆகிய வர்த்தக அமைப்புகளின் பயன்பாட்டிற்காக இந்த 30,000 தொழிலாளர் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என்று இதன் தொடர்பில் மே 6-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் பிரிமாஸ் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்க் கூட்டத்தில் தி.முத்துசாமி குறிப்பிட்டார்.
இந்திய வர்த்தகர்களின் தற்போதைய தொழிலாளர் பற்றாக்குறை சிக்கலுக்கு அரசியல் பரபரப்பு மிகுந்த இந்த நேரத்திலும் சீர்தூக்கிப் பார்த்து முப்பது ஆயிர தொழிலாளர்களுக்கு அனுமதி அளித்த இடைக்கால அரசின் உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ சாகிட் ஹமிடிக்கு இந்திய வர்த்தகர்களின் சார்பில் நன்றி தெரிவிக்கும் அதேவேளை, இதற்காக முனைப்பு காட்டிய மஇகா தேசியத் தலைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக மஇகா தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டத்தோ தி.மோகன் இந்தப் பிரச்சினையில் அதிக அக்கறைக் காட்டியதுடன் தேசியத் தலைவருக்கு உதவியாக செயல்பட்டதை இந்திய வர்த்தக சமூகம் நன்றியுடன் நினைவுகூர்கிறது என்று முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கப் பொறுப்பாளர், மளிகைக் கடை உரிமையாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் பி.எஸ்.ராஜா, பொற்கொல்லர்-நகைக்கடை சங்க செயலாளர் சி.எஸ்.வீரபாலன், ஜவுளிக் கடை சங்கத்தின் செயலாளர் என்.இரவீந்திரன், முடி திருத்தக உரிமையாளர் சங்க தேசிய துணைத் தலைவர் டி. சுதந்திரன், அஜுந்தா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் பாண்டிராஜன், முஸ்லிம் மினி மார்க்கெட் உரிமையாளர் சங்கத்தின் சார்பில்(மாவார்) அமானுல்லா கான் ஆகியோர் இந்த செய்தியாளர்க் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், அரசு வழங்கியுள்ள இந்த அனுமதியால் தொழிலாளர் பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டிருந்த தங்களின் தொழில் மேம்பாடு அடையும் என்று கருத்து தெரிவித்தனர்.
அத்துடன், உணவக உரிமையாளர்கள் எதிர்நோக்கும் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சினைக்கும் தீர்வு காண உள்துறை அமைச்சரும் மஇகா தலைவர்களும் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் முத்துசாமி மேலும் தெரிவித்தார்.