மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (எம்டியுசி) ஆதரவு பாரிசான் நேசனலுக்குத்தான், ஏனென்றால் பராமரிப்பு பிரதமர் தொழிலாளர்களுக்கு அதிகமாகச் செய்திருக்கிறார் என்று அதன் தலைவர் அப்துல் ஹாலிம் மன்சோர் கூறுகிறார்.
நாட்டின் 14 மில்லியன் தொழிலாளர்களும் அவர்களின் வாக்குகளை பக்கத்தான் ஹரப்பானுக்கு நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் அளிக்க வேண்டும் என்று எம்டியுசின் தலைமைச் செயலாளர் ஜே. சோலமன் அறிக்கை வெளியிட்டிருந்த சில மணி நேரங்களுக்குப் பின்னர், ஹாலிம் மன்சோரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சில ஓன்லைன் செய்தித்தளங்கள் சோலமன் தேசிய வங்கித் தொழிலாளார்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் வெளியிட்ட செய்தியை எம்டியுசியின் தலைமைச் செயலாளர் சோலமன் வெளியிட்டதாக திரித்துத் கூறி விட்டன என்றும், தாம் சோலமன் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்திருப்பதாகவும், அதில் சோலமன் எம்டியுசியைப் பிரதிநிதிப்பாகக் கூறவில்லை என்றும் ஹாலிம் கூறுகிறார்.
மலேசியாகினி மட்டுமல்லாமல், சோலமனின் அறிக்கையை த சன் டெய்லி, த எட்ஜ் மார்க்கெட்ஸ் மற்றும் இதர பத்திரிக்கைகளும் வெளியிட்டுள்ளான.
மலேசியாகினி சோலமனின் முழு அறிக்கையையும் அதன் செய்தியுடன் வெளியிட்டுள்ளதுடன், அவரின் பதிலுக்கு அவரைத் தொடர்புகொள்ள முயன்று வருகிறது.