முன்னாள் பிரதமர் நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா சுபாங் விமான நிலையத்திலிருந்து ஜாக்கர்த்தாவுக்கு புறப்படுவதைத் தடுத்த நிறுத்த மக்கள் அங்கு கூடினர்.
அவர்கள் இருவரும் இன்று காலை மணி 10க்கு அந்த விமான நிலையத்திலிருந்து கிளம்புவார்கள் என்ற செய்தியைத் தொடர்ந்து இக்கூட்டத்தினர் அங்கு கூடினர்.
ஆனால், அவர்கள் இருவரும் வெறும் இரண்டு நாள் வருகையை மட்டும் மேற்கொள்கின்றனர் என்று நஜிப்புக்கு நெருக்கமான வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.
தாம் தமது குடும்பத்துடன் இரண்டு நாள் ஓய்வு எடுத்துக்கொள்ளப் போவதாக நஜிப்பும் சமூக ஊடகத்தின் வழி கூறியிருந்தார்.
சுபாங் விமான நிலையத்தில் கூடியிருந்தவர்களும் செய்தியாளர்களும் அவ்விடத்திற்கு ஒரு தோயாத்தா வெல்பயர் வந்ததும் அதைச் சூழ்ந்து கொண்டனர். இது சில நிமிடங்களுக்கு நீடித்தது.
பின்னர், அந்தக் காரில் அராவ் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷகிடான் காசிம் காணப்பட்டார். அவர் உடனடியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார். அவருடைய காருடன் ஓட்டுநர் மட்டும் இருந்த இன்னொரு காரும் உள்ளே சென்றது. போலிஸ் இலகு தாக்கல் படை அங்கு வந்து சேர்ந்தது. காலை மணி 10.25 அளவில் நெருக்கடி நிலை மாறியது.