பேராக் மந்திரி புசாராக பதவி ஏற்கப்போகின்றவர் யார் என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது. இதற்கிடையில், இன்று மாலை மணி 5க்கு மந்திரி புசார் பதவி உறுதிமொழி எடுப்பார் என்றும் கூறப்பட்டிருப்பதால் பரபரப்பு மேலும் கூடியுள்ளது.
பேராக்கின் மூன்று பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று காலை 9.30 வாக்கில் இஸ்தானா கிந்தாவுக்குள் செல்லக் காணப்பட்டனர்.
பிஎன் சட்டமன்ற உறுப்பினர் எவரும் அங்கில்லை. பராமரிப்பு மந்திரி புசார் ஜம்ரி அப்டு காடிரின் கார் மட்டும் காணப்பட்டது.
பக்கத்தான் ஹரப்பான் பிரதிநிதிகள் நண்பகல் 12மணிக்குப் பேராக் சுல்தானைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
முன்னதாக இஸ்தானா கிந்தா பேச்சாளர் முகம்மட் அனுவார் ஸைனி, சுல்தான் பிற்பகல் மணி 2க்குத்தான் பிஎன் பிரதிநிதிகளைச் சந்திப்பார் என ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
நேற்று பேராக் ஹரப்பான் சுல்தானைச் சந்தித்திருக்கிறது. அப்போது பேராக் அரசை அமைக்கும் முதல் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கிய சுல்தான் நஸ்ரின் ஷா, அதற்குத் தேவையான இடங்கள் கைவசமுள்ளதை ஹரப்பான் இன்று பிற்பகல் மணி 2க்குள் நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதேபோல் இன்று தம்மைச் சந்திக்க வரும் பிஎன்னும் அதனிடம் 30 இடங்கள் இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் சுல்தான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மந்திரி புசார் பதவி ஏற்பு இன்று மாலை 5மணிக்கு நடக்கும் என்று தெரிவித்த அனுவார், அதற்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறினார்.
“ மாநில அரசை விரைவில் அமைக்க சுல்தான் விரும்புகிறார்”, என்றாரவர்.
ஜம்ரியின் தொடர்பு இயக்குனர் நிஜாம் ஈசா, மாநில அரசை அமைக்க பிஎன்னிடம் போதுமான இடங்கள் இருப்பதாகவும் அதன் தொடர்பில் அது சுல்தானைச் சந்திக்கப்போவதாகவும் வியாழக்கிழமை இரவே அறிவித்திருந்தார்.
பேராக் சட்டமன்றம் 59 இடங்களைக் கொண்டது. மாநில அரசை அமைக்க விரும்பும் கட்சி சாதாரண பெரும்பான்மையாக 30 இடங்களையாவது கொண்டிருக்க வேண்டும்.
புதன்கிழமை தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் 29 இடங்களையும் பிஎன் 27 இடங்களையும் பாஸ் 3 இடங்களையும் வென்றன.
பக்கத்தான் ஹரப்பான் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களைத் தன் பக்கம் இழுக்க வலை வீசுவதாக வதந்திகள் உலவுகின்றன.
இப்போதுள்ள நிலவரப்படி பாஸ் உதவி இருந்தால் மட்டுமே அங்கு எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியும். அந்த வகையில் பாஸ் பேராக்கில் ஒரு ‘கிங்மேக்கர்’ ஆக விளங்கிகுறது.