மக்களவையில் முதல் வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமைதியான கூட்ட மசோதா மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என பக்காத்தான் ராக்யாட் இன்று கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த மசோதா மீது நடைபெறும் விவாதத்தில் தாங்கள் அதனைக் கடுமையாக எதிர்க்கப் போவதாக பக்காத்தான் தலைவர்கள் அறிவித்தனர்.
அந்த மசோதாவில் காணப்படும் விதிமுறைகள் போலீஸ் சட்டத்தின் 27வது பிரிவை விட ஒடுக்குமுறையாக இருப்பதாக அவர்கள் கூறினர்.
“இது உண்மையில் ஒரு படி பின்னடைவாகும், இரண்டு மாதங்களுக்கு முன்னர் உருவாக்கிய கானல் நீரை, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் துணுக்குகளாக உடைத்து விட்டார்.”
“அதில் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சுமையானது, அதிகாரத்தைக் காட்டுகிறது, ஜனநாயகத்துக்கு புறம்பானது,” என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
எந்த ஒரு கூட்டத்தையும் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் 30 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள பல ஒடுக்குமுறையான விதிமுறைகளில் அடங்கும் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
சட்டவிரோதமானது என தான் கருதும் கூட்டங்களில் சம்பந்தப்படுகின்றவர்களையும் கைது செய்யவும் கலைக்கவும் போலீஸுக்கு “முழு அதிகாரத்தை அந்த மசோதா வழங்குவது குறித்தும் அன்வார் கவலை தெரிவித்தார்.
“உலக அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் வேளையில் அதற்கு நேர் மாறாக இன்னும் கடுமையான சட்டத்தை முன்மொழிந்துள்ள ஒரே நாடு உலகில் மலேசியாவாகத்தான் இருக்க வேண்டும்.”
“பர்மா கூட நியாயமான சுதந்திரமான தேர்தல்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளது. அதன் விளைவாக தாம் போட்டியிடப் போவதாகக் கூட ஆங் சான் சூ கீ அறிவித்துள்ளார்.”
அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தேர்தல் பிரச்சார காலத்துக்கு அப்பால் சில அரசியல் சொற்பொழிவுகளே நிகழும் என பாஸ் துணைத் தலைவர் சலாஹுடின் அயூப் கவலை தெரிவித்தார்.
“நாம் இப்போது 10 நாட்களுக்கு முன்னர் தான் அறிவிப்பு கொடுக்க வேண்டும்,” என்றார் அவர்.
‘முன் கூட்டியே அறிவிப்பு கொடுப்பது முடியாத காரியம்’
கூட்டங்களுக்கு முன் கூட்டியே அறிவிப்பு கொடுக்க வேண்டும் எனக் கூறுவது முடியாத காரியம் என சலாஹுடின் சொன்னார்.
“நாளை இஸ்ரேல் சவூதி அரேபியாவைத் தாக்குவதாக வைத்துக் கொள்வோம். ஆட்சேபம் தெரிவிக்க நாம் 30 நாட்கள் காத்திருக்க வேண்டுமா?”
அமைதியான கூட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள், முதலை வாயிலிருந்து தப்பி புலி வாய்க்குள் விழுவதற்கு ஒப்பா க உள்ளன என அவருடைய பாஸ் தோழரான மாஹ்புஸ் ஒமார் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாஹ்புஸ், மக்களவையில் உள்ள பெரும்பான்மையைக் கொண்டு பிஎன் அந்த மசோதாவை நிறைவேற்றி விடும் என ஒப்புக் கொண்டார்.
“அதன் காரணமாக நாங்கள் அந்த விவகாரத்தை சுஹாக்காம் என்ற மனித உரிமை ஆணையத்திடம் நாளை கொண்டு செல்கிறோம். அந்த மசோதா மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என அந்த ஆணையம் வலியுறுத்த வேண்டும் என நாங்கள் அதனைக் கேட்டுக் கொள்வோம்.”
சலாஹுடின், புக்கிட் பெண்டேரா உறுப்பினர் லியூ சின் தொங்(டிஏபி) , கெப்போங் எம்பி தான் செங் கியாவ், லெம்பா பந்தாய் உறுப்பினர் நுருல் இஸ்ஸா அன்வார் (பிகேஆர்) ஆகியோர் உட்பட பலர் நாளை சுஹாக்காமிடம் மகஜரைச் சமர்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.