தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் பதவி துறக்க வேண்டும் அல்லது 100 நாள்களுக்குள் அகற்றப்பட வேண்டும், பெர்சே

 

தேர்தல் ஆணையத்தின் ஏழு உறுப்பினர்களும் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும். அதை அவர்கள் செய்யாவிட்டால் அவர்களை ஆணையத்திலிருந்து அடுத்த 100 நாள்களுக்குள் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் பெர்சே கோரியுள்ளது.

கிடைக்கப் பெற்ற புகார்கள் மற்றும் தேர்தல் வாக்களிப்பு நாளுக்கு முன்னால் அந்த ஆணையம் புரிந்த குற்றச் செயல்கள் ஆகியவை தேர்தல் ஆணையம் பாரிசான் நேசனல் வெற்றியை உறுதி செய்வதற்காக அயராது உழைத்தது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன என்று பெசேயின் இடைக்காலத் தலைவர் ஷருல் அமான் முகமட் சாரி கூறினார்.

சட்டத்தை மீறியதற்காக அனைத்து தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் சில தேர்தல் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுவதற்காக அடுத்த 100 நாள்களுக்குள் போலீசும் சட்டத்துறை அலுவலகமும் ஒரு சிறப்பு பணிப்படையை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், அதே 100 நாள்களுக்குள் தேர்தல் அமைவுமுறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு ஓர் அரச விசாரணை ஆணையத்தையும் அமைக்க வேண்டும் என்றார்.

(தேர்தல் ஆணையத்தின் தலைவர்) முகமட் ஹசிம் அப்துல்லாவும் அவரது இதர ஆறு சகாக்களும் ஆணையத்தில் தொடர்ந்து இருக்கும் வரையில் எந்த ஒரு சீர்திருத்தமும் ஏற்படாது. அவர்கள் விலக மறுத்தால், அவர்களை அகற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கும்படி நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுகொள்கிறோம் என்று பெர்சேயின் சான் சு சோங் கூறினார்.