ஏர்ஏசியா பங்குகள் சரிவு

பங்குச்   சந்தையில்   இன்று   வர்த்தகம்   தொடங்கியபோது   ஏர் ஏசியா  நிறுவனப்  பங்குகள்   10 விழுக்காடு   சரிவு  கண்டன.  அந்நிறுவனத்   தலைவர்    டோனி   பெர்னாண்டஸ்    பொதுத்   தேர்தலில்   முன்னாள்   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்கை   ஆதரித்தது    தப்பு   என்று   ஒப்புக்கொண்டு   மன்னிப்பு   கேட்ட   பின்னரும்   இது    நிகழ்ந்தது.

நஜிப்  கடந்த   வாரம்    நடைபெற்ற   பொதுத்   தேர்தலில்    அதிர்ச்சிதரும்   வகையில்    முன்னாள்   பிரதமர்    டாக்டர்   மகாதிர்  முகம்மட்டிடம்    தோல்வி   கண்டார்.

புதன்கிழலை   வாக்களிப்புக்கு  இரண்டு   நாள்   முன்னதாக  டோனி   பெர்னாண்டஸ்,   ஒரு   காணொளியில்   குறைந்த   விலை   விமானப்  பயண   நிறுவனங்களுக்கு   பேராதரவு    தருவதாக   நஜிப்பையும்   அரசாங்கத்தையும்  வெகுவாக    பாராட்டியிருந்தார்.

அதே   நாளில்   நஜிப்,   தாமும்   பெர்னாண்டசும்    பாரிசான்  நேசனல்   ஆதரவு   சுலோகம்  பொறிக்கப்பட்ட    ஒரு   விமானத்தின்  முன்னே  நிற்பதைக்   காண்பிக்கும்    நிழற்படங்களை  வெளியிட்டிருந்தார்.

இதனால்   பக்கத்தான்   ஹரப்பான்   ஆதரவாளர்கள்   பெர்னாண்டஸ்மீது   கடுங்   கோபம்   கொண்டார்கள்.

“நடந்ததற்கு   வருந்துகிறேன். முக்கியமான   கட்டத்தில்   பணிந்து  போய்விட்டேன். அது   சரியல்ல.  அதை   நினைத்து  என்றென்றும்  வருந்துவேன்”,  என்றவர்   ஞாயிற்றுக்கிழமை   ஒரு   காணொளியில்   கூறியிருந்தார்.

திங்கள்கிழமை   ஏர்   ஏசியா   பங்கு  விலை   10  விழுக்காடு    சரிவு  கண்டு   பின்னர்  ஓரளவு  மீண்டது.

எல்லாமே   நஜிப்பைத்   திருப்திபடுத்தும்   முயற்சிகள்

காணொளிகள்   வெளியிட்டது  விமானத்துக்கு   பிஎன்-ஆதரவு   வண்ணம்   பூசியது   எல்லாமே     நஜிப்   அரசைத்    திருப்திப்படுத்துவதற்காக     செய்யப்பட்டவை     என்றாரவர்.  வாக்களிப்பு    நாளில்   கூடுதல்   பயணங்களை   ஏற்பாடு   செய்ததாலும்   மகாதிருக்கு  ஆதரவு    தெரிவித்த    துணை   நிறுவனம்  ஒன்றின்   தலைவரைப்  பணிநீக்கம்     செய்யவில்லை    என்பதற்காகவும்   தாம்   “கடும்  அழுத்தத்துக்கு”   ஆளானதாக    பெர்னாண்டஸ்   சொன்னார்.

தேர்தலில்   மகாதிருக்கு    ஆதரவாக  பரப்புரை     செய்து   வந்த    ஏர் ஏசியா  எக்ஸ்   தலைவர்  ரபிடா   அசிசைப்  பணிநீக்கம்   செய்ய    மறுத்தார்   பெர்னாண்டஸ்.

“ரபிடாவின்   தாக்கம்,   செல்வாக்கு  அதிகரிக்க,   அதிகரிக்க   நெருக்குதலும்  அதிகரித்தது.  பிரதமர்   அலுவலகத்தின்   நெருக்குதலைத்    தாங்க   முடியவில்லை”,  என்றாரவர்.

வாக்களிப்பு   நாளில்   கூடுதல்  பயணங்களுக்கு   ஏற்பாடு   செய்தது    நெருக்குதலை   மேலும்   அதிகரித்தது.

“24  மணி  நேரத்துக்குள்   மலேசிய   வான்  போக்குவரத்து    ஆணையம்   அப்பயணங்களை  இரத்துச்  செய்யச்  சொன்னது.   அதனால்  கடும்   அழுத்தத்துக்கு   ஆளானோம்”,  என்று  கூறிய   பெர்னாண்டஸ்   ஏர் ஏசியா   120  கூடுதல்  பயணங்களை    ஏற்பாடு    செய்திருந்தது    என்றார்.

இதனிடையே,   பெர்னாண்டஸ்  கூறியவை  “கடும்  குற்றச்சாட்டுகள்”    என்றும்   அவற்றை  விசாரிக்கத்    தொடங்கி  விட்டதாகவும்   மலேசிய   வான்   போக்குவரத்து   ஆணையம்  கூறிற்று.

-ராய்ட்டர்ஸ்