குடிநுழைவுத்துறையின் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய பலரது பெயர்களைக் கொண்ட இன்னொரு பட்டியல் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் கொடுக்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் ஏற்கனவே கருப்புப் பட்டியலிடப்பட்டு விட்டனர் என ஒரு வட்டாரம் கூறியது.
“இரண்டாவது பட்டியல் பிரதமரிடம் ஒப்புதலுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது”, என்றது குறிப்பிட்டது.
இந்த இரண்டாவது பட்டியல் 1எம்டிபி விவகாரத்திலும் விசாரணை நடக்கும் மற்ற வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களைக் கொண்டது.
அது விசாரணைகளில் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது இனி சம்பந்தப்படவிருப்போர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது. இப்போதே தடுப்பதுதான் நல்லது. இல்லையென்றால் அயலகத்தில் உள்ளோரை நாட்டுக்குத் திரும்ப அழைத்து வருவது சிக்கலாகிவிடும். அதற்கு நிறைய நடைமுறைகள் உள்ளன என்று அது கூறிற்று.
யார் யார் அதில் இடம்பெற்றுள்ளனர் என்று கேட்டதற்கு அது பதிலளிக்கவில்லை.
“பட்டியல் மிக நீண்டது. அவ்வளவுதான் சொல்ல முடியும்”, என்று அது கூறியது.