பொய்ச் செய்தி சட்டம் : நீக்கப்படும் எனக் கூறப்பட்டது, இப்போது ஆய்வு செய்யப்படும் எனச் சொல்லப்படுகிறது

2018-ஆம் ஆண்டு பொய்ச்செய்தி சட்டத்தை இரத்து செய்யலாமா என்பதை அரசாங்கம் முதலில் பரிசீலிக்கும் என துன் டாக்டர் மகாதிர் முஹமட் இன்று தெரிவித்தார்.

“நாம் ஆய்வு செய்ய வேண்டும்,” என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் சுருக்கமாக கூறினார்.

பொதுத் தேர்தலுக்கு முன்னர், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால், பிஎன் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பொய்ச் செய்தி சட்டத்தை அகற்றுவதாக மகாதிர் உறுதியளித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம்,  ஆறு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் RM500,000 வரை அபராதமும் விதிக்க வகைசெய்யும் பொய்ச் செய்தி சட்டம் 2018 அமலாக்கம் கண்டது.

தவறான செய்தி என வரையறுக்கப்படுவது எவ்வாறு என தெளிவான வரையறை இல்லாத நிலையில், குற்றம் சாட்டப்படுபவர் மீது திணிக்கப்படும் தண்டனை கடுமையானது என்று பலர் விமர்சித்தனர். அவர்களது கருத்துப்படி, மாறுபட்ட கருத்துக்களை அடக்குவதற்கு அரசாங்கத்தால் இச்சட்டம் பயன்படுத்தப்படலாம்.

நேற்று, மகாதிர் தனது புதிய அரசாங்கம் பொய்ச் செய்தி என்பதனைத் தெளிவாக வரையறுக்கும் எனக் கூறினார்.

புதிய அரசாங்கம் பத்திரிக்கை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தாது என்ற அவர், அதேசமயம், மக்களைத் தூண்டுவதற்கான எவ்வித முயற்சியும் ஏற்கப்படாது என்றும்  எச்சரித்தார்.

அரசாங்கம் பொய்ச் செய்தி சட்டத்தை அகற்றும்

முன்னதாக, புதிய நிதியமைச்சர், லிம் குவான் எங், பொய்ச் செய்தி சட்டம் 2018 பற்றிய பக்காத்தான் ஹராப்பானின் நிலைப்பாட்டை விளக்கினார்.

மகாதீரின் கருத்துபற்றி கேட்டபோது, சர்ச்சைக்குரிய அச்சட்டத்தை நீக்குவதற்கான நிலைபாட்டில் ஹராப்பான் உறுதியாக இருக்கிறது என்றார்.

“அவர் அதை இரத்து செய்ய மாட்டோம் என்று சொல்லவில்லை. நான் சொன்னதைப் போலதான் அவரும் கூறியுள்ளார்,” என்றார்.

“நாளை நான் அவரிடம் இதுபற்றி விளக்கமளிப்பேன், அவரும் ஒத்த கருத்தே கொண்டிருப்பார் என நான் நம்புகிறேன்,” என்று இன்று ஜோர்ஜ் டவுனில், அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

“ஒரு செய்தி பொய்யானதா, உண்மையானதா என அரசாங்கம் நிர்ணயிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, அந்த அரசாங்கம் நாங்களாக இருந்தபோதும்.

“உண்மைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பது அவசியமாக இருக்க வேண்டும், அது உண்மை என்று நாங்கள் கூறுவதால், அது உண்மையாகி விடாது, அதுபோல போலி என்று நாங்கள் சொன்னாலும் அது பொய்யானதாகி விடாது,” என்று அவர் விளக்கினார்.