சமூக வலைத்தளங்களில் புருணை சுல்தான் மலேசிய அரசாங்கத்துக்கு யுஎஸ்$1 பில்லியன் நன்கொடை அளித்தார் என்று பரவிவரும் செய்தி பொய்யான செய்தி என்று பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) கூறியது.
இன்று காலை முக்ரிஸ் மகாதிர் எப்சி முகநூல் பக்கத்தில் வெளியான அச்செய்தியில் சிறிதளவும் உண்மை இல்லை என்று பிஎம்ஓ பேச்சாளர் எண்டி ஷாஸ்லி மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.
இப்போது அகற்றப்பட்டுவிட்ட அப்பதிவு , நேற்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டைச் சந்தித்த புருணை சுல்தான் ஹஸ்ஸனால் போல்கியா மலேசியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க யுஎஸ்$1 பில்லியனை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியதாகக் கூறிற்று.
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவருடைய வங்கிக் கணக்கில் காணப்பட்ட ரிம2.6 பில்லியனை சவூதி அரசக்குடும்பத்தின் அன்பளிப்பு என்று சொன்னதைக் குத்திக் காட்டும் வகையில், “கவனியுங்கள்- பணம் அவருடைய தனிப்பட்ட வங்கிக்கணக்குக்குச் செல்லவில்லை”, என்ற குறிப்பும் கூடவே காணப்பட்டது.
பொய்யான செய்தி ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட அந்த முகநூல் நிர்வாகிகள் அப் பதிவை நீக்கிவிட்டனர்.