1எம்டிபி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நஜிப்பை நீதிமன்றத்தில் நிறுத்துவதிலிருந்து தாம் பின்வாங்கப் போவதில்லை என்பதை பிரதமர் மகாதிர் உறுதிப்படுத்தினார்.
தோக்கியோ, வால் ஸ்திரீட் ஜர்னல் சிஇயோ மன்றத்துடன் வீடியோ இணைப்பு வழி நடந்த ஒரு நேர்காணலில் நஜிப்புடன் எந்த ஒரு பேரத்திற்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக மகாதிர் கூறினார்.
“பேரம் இல்லை”, என்று அவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
1எம்டிபியினால் இழப்பிற்குள்ளாகிய யுஎஸ்$4.5 பில்லியனில் (ரிம18.19 பில்லியன்) ஒரு பகுதியை மீட்பதற்கு நஜிப் தகவல் அளித்தால் அவருக்கு கருணை காட்டுவாரா என்ற கேள்விக்கு மேற்கண்டவாறு மகாதிர் கூறினார்.
அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தரப்புக்கு வலுவான ஆதாரம் இருப்பதால் நஜிப் மீது விரைவில் குற்றம் சாட்டப்படும் என்றாரவர்.
ஆனால், இந்த விவகாரத்தில் தாம் ஒரு பிரச்சனையை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
அவருடன் இருந்த சிலர் அவர் பக்கம் இருக்கிறார்கள். அவர்களில் புதிய அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கப் போகிறவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை என்று மகாதிர் மேலும் கூறினார்.
மகாதிரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நஜிப், தம்மை வீழ்த்துவதற்காக இக்குற்றச்சாட்டுகளை மகாதிர் சுமத்துகிறார் என்று நஜிப் திருப்பித் தாக்கியுள்ளார்.