அம்னோ உறுப்பினர்கள் கட்சிமீது அதிருப்தி கொண்டிருந்ததை அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் தெரியப்படுத்தாதற்காக கைரி ஜமாலுடின் வருத்தப்படுவதை டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
அம்னோ இளைஞர் தலைவர் காலம்தாழ்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்ட லிம், கைரி அவரது கண்மூன்னே நிகழ்ந்த 1எம்டிபி ஊழல் குறித்து கருத்துரைப்பதைத் தவிர்ப்பதுபோல் தெரிகிறது என்றார்.
கைரியின் சேனல் நியுஸ் ஏசியா நேர்காணல் குறித்துத்தான் லிம் அவ்வாறு கூறினார். அந்நேர்காணலில் கைரி, முகைதின் யாசினும் ஷாபி அப்டாலும் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதைத் தொடர்ந்து அடிநிலை உறுப்பினர்கள் கட்சியை நிராகரிக்கத் தொடங்கியது பற்றி நஜிப்பிடம் சொல்லாமலிருந்து விட்டதற்கு வருந்துவதாக குறிப்பிட்டிருந்தார்.
1எம்டிபி விவகாரம் குறித்துக் குறைகூறியதற்காக முகைதினும் ஷாபி அப்டாலும் கட்சிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியை யாரும் நஜிப்பிடம் தெரியப்படுத்தவில்லை. அம்னோவில் உள்ள எவரும் “பூனைக்கு மணிகட்ட முன்வரவில்லை” என ரெம்பாவ் எம்பியுமான கைரி கூறினார்.
“கட்சியில் பிரச்னை என்பதை ஒப்புக்கொள்ள எவரும் தயாராக இல்லை. அதுதான் நாங்கள் செய்த பெருந் தவறு”, என்றாரவர்.
இவ்வளவு பேசும் கைரி பிரச்னைக்குரிய 1எம்டிபி விவகாரம் தொடர்பில் பூனைக்கு மணிகட்டத் தயாரா என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் வினவினார்.
“அம்னோ இளைஞர் தலைவர் காலம்தாழ்த்தி வருத்தப்படுகிறார்.
“இப்போதாவது கைரி பூனைக்கு மணிகட்டத் தயாரா?”.
அதற்கு அவர் தயாராக இல்லை என்றுதான் தெரிகிறது. கைரி 1எம்டிபி ஊழல் விவகாரம் பற்றிப் பேசுவதைக் கெட்டிக்காரத்தனமாக தவிர்க்கிறார் என்று லிம் கூறினார்.
நடந்துவிட்ட தவறுக்குப் பரிகாரம் செய்ய நினைத்தால் கைரி, பிஎன் உச்சமன்றத்தை அவசரமாகக் கூட்டி 1எம்டிபிக்கு எதிராக முன்பே கருத்துரைக்காமல் “நாட்டின் நம்பிக்கைக்கு இழைத்த துரோகத்துக்காக” பிஎன் முன்னாள் அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பொது மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என லிம் கூறினார்.