பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சித் தலைவர் முகிடின் யாசின், ஜொகூர் மந்திரி பெசார் ஒஸ்மான் சப்பியன் நியமனத்தில் ஒரு பெரிய தவறு செய்துவிட்டார் என பத்திரிகையாளர் ஜைனுடின் மைடின் கூறியுள்ளார்.
“ஜொகூர் மந்திரி பெசாரை நியமிப்பதில் முகிடின் ஒரு பெரிய தவறைச் செய்துள்ளார், மக்களுடைய விருப்பத்திற்கு எதிரான இது பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்,” என்று அவர் கூறினார்.
கோத்தா திங்கி மாவட்ட முன்னாள் கவுன்சிலர், ஃபிஸ்வான் ரசிடியை தனது அந்தரங்கச் செயலாளராக நியமித்ததைத் தொடர்ந்து, ஒஸ்மான் சப்பியானை எச்சரிக்கையாக இருக்கும்படி முகிடின் நினைவுபடுத்தினார்.
மாநில அதிகாரிகள் நியமனத்தில், பக்காத்தான் ஹராப்பான் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென ஒஸ்மானுக்கு அறிவுறுத்தியுள்ளதாக முகிடின் கூறினார்.
“இந்தப் புதிய மந்திரி பெசார் ஆற்றல் வாய்ந்தவராகத் தெரியவில்லை, மேலும் ஜொகூர் அம்னோ ஏற்படுத்தியத் தவறுகளைத் திருத்த அவருக்குத் தைரியம் இல்லை,” என உத்துசான் முன்னாள் தலைமை ஆசிரியருமான அவர் கூறினார்.
“முகிடின் கண்டிக்க வேண்டும், ஆனால் அவரால் தனித்து முடிவெடுக்க முடியாது.”
இதற்கிடையே, மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, ஜொகூர் மந்திரி பெசாரின் அந்தரங்கச் செயலாளராக தான் நியமிக்கப்பட்டுள்ளதை ஃபிஸ்வான் உறுதிப்படுத்தினார்.
ஆனால், இன்னும் அவர் அம்னோ உறுப்பினராக இருக்கிறாரா என்ற கேள்விக்குப் ஃபிஸ்வான் பதில் சொல்லவில்லை.