அரசாங்க செலவினங்களைக் குறைக்க, 17,000 அரசியல் நியமனப் பொது ஊழியர்களை அரசாங்கம் அகற்றும் எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் அறிவித்துள்ளார்.
அரசியல் நியமனப் பதவிகள் ஒரு ‘வீண் செலவு’ என அவர் விவரித்தார்.
“அதிகமான ஒப்பந்த ஊழியர்கள் இருப்பதாக நாங்கள் அறிகிறோம். இவர்களில் சிலர் நிர்வாகத் தேவைகளுக்காக நியமிக்கப்பட்டவர்கள், ஆனால் சிலருக்கு அரசியல் காரணங்களுக்காக அப்பதவி வழங்கப்பட்டுள்ளது, அது ‘அரசியல் நியமனம்’ ஆகும்.
“ஆக, இந்த அரசியல் நியமன அதிகாரிகளை நாம் பதவி நீக்கம் செய்யவுள்ளோம்,” என்று இன்று புத்ராஜெயாவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
இருப்பினும், குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களான ஓட்டுனர்கள் போன்றோர் நிறுத்தப்பட மாட்டார்கள், அவர்களது தகுதிக்கு ஏற்ப அவர்கள் மாற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
தற்போது 1.6 மில்லியன் பொது ஊழியர்களும் 778,894 அரசு ஓய்வூதியம் பெறுவோரும் உள்ளனர்.
2018-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள RM280.25 பில்லியனில், RM79.15 பில்லியன் ஓய்வூதியம் வழங்கப் பயன்படுத்தப்படுகிறது.
மே 10-ம் தேதி, தனது பதவியேற்புக்குப் பின்னர், 25 அமைச்சர்களைக் கொண்ட ஒரு சிறிய அமைச்சரவையை அமைக்க திட்டமிட்டுள்ளதாகச் சொன்னார்.