நஜிப் வீட்டில் போலிசாரின் தேடல் தொடர்கிறது

நேற்று இரவு, கோலாலம்பூர், ஜாலான் லங்காக் டூத்தாவில் உள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் இரசாக்கின் தனியார் இல்லத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட தேடல் நடவடிக்கை, 12 மணி நேரங்கள் கடந்தும் இன்னும் தொடர்கிறது.

சில போலிஸ் வாகனங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறின, ஆனால் ‘பிளாக் மரியா டிரக்’ உட்பட இன்னும் சில வாகனங்கள் அங்கேயே உள்ளன. புக்கிட் அமான் மத்திய வணிகத் துறையின் அதிகாரிகள் இன்னும் நஜிப்பின் இல்லத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

வெளியேறிய வாகனங்கள் ஒன்றில், ஒரு நபர் மூடிய முகத்துடன் பயணிகள் இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

நேற்றிரவு, 10.15 மணியளவில் போலிஸ் படையினர் சில வாகனங்களில் அங்கு வந்தனர், அதிகாலை மணி 3.50 அளவில் பிளாக் மரியா டிரக் உள்ளே நுழைந்தது.

நஜிப் தரப்பு வழக்கறிஞர் ஹர்பால் சிங் கிரவால், போலீசார் கைப்பைகள், பரிசுகள் மற்றும் சில தனிப்பட்ட பொருட்கள் அடங்கியப் பெட்டிகளைக் கைப்பற்றியதாகத் தெரிவித்தார்.

பண மோசடி மற்றும் 1எம்டிபி ஊழல் தொடர்பாக நஜிப்பிடம் விசாரணை நடத்தப்படும் என தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.