‘போலீஸ் நடவடிக்கை இயல்புக்கு மாறானது!’ – நஜிப்புக்கு நெருங்கிய வட்டாரங்கள்

முன்னாள் பிரதமர் நஜிப் இல்லத்தில் போலிசார் மேற்கொண்ட சோதனை தொடர்பில், அவருக்கு நெருக்கமானவர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிபடுத்தியுள்ளனர்.

இஸ்லாமியர்கள் நோன்பு தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக போலிசார் மேற்கொண்டுள்ள இச்சோதனை, இயல்புக்கு மாறாக அமைந்துள்ளது என மலேசியாகினியிடம் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அந்நபர், நேற்றிரவு மலாய் சட்டை அணிந்திருந்த நஜீப் சோபா நாற்காலியில் தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டார்.

வர்த்தகக் குற்றப் புலனாய்வு பிரிவின் போலிஸ் அதிகாரிகள் முன்னாள் பிரதமரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எந்த சூழ்நிலையிலும், நாட்டின் முன்னாள் பிரதமர் என்ற வகையில் நஜிப் மதிக்கப்பட வேண்டுமென அந்நபர் கூறினார்.

“இது சரியான நடவடிக்கை அல்ல, அவர்கள் (போலிஸ்) ஏன் முன்னதாக (பகல் நேரத்தில்) சோதனையை மேற்கொள்ளவில்லை? அவர் (நஜிப்) நோன்புக்குத் தயாராக வேண்டும்,” என்றார் அவர்.

“மகாதிர் தனது பழிவாங்கல் நடவடிக்கையில் வெற்றியடைந்துள்ளது போல தெரிகிறது, இப்போது அவர் எங்குத் தூங்கிக் கொண்டிருந்தாலும், சந்தோஷமாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் அமர் சிங் இஸ்ஹார் சிங், பெவிலியன் ரெசிடன்ஸ் மற்றும் புத்ராஜெயா, பிரதமர் அலுவலகம் உட்பட 5 இடங்களில் சோதனைகள் நடந்துகொண்டிருப்பதை உறுதிபடுத்தினார்.