மஇகா-வுக்குச் சொந்தமான RM3 பில்லியன் சொத்துக்களைத் திருப்பிக் கொடுங்கள், கட்சி உறுப்பினர் வலியுறுத்து

மஇகா-வுக்குச் சொந்தமான சொத்துக்களைத் திருப்பிக் கொடுக்குமாறு, கட்சியின் முன்னாள் தலைவர் ச சாமிவேலுவையும் கட்சியின் கல்வி பிரிவு – எம்.ஐ.இ.டி. வாரிய உறுப்பினர்களையும் மஇகா உறுப்பினர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான RM2.5 பில்லியன் சொத்துக்களை நிர்வகிக்கும் எம்.ஐ.இ.டி., அச்சொத்துக்களைக் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டுமென கட்சியின் உறுப்பினர் கேபி சாமி சொன்னார். 14-வது பொதுத் தேர்தலில், அதிர்ச்சியளிக்கும் வகையில் தோல்வியடைந்த கட்சியை கட்டியெழுப்ப இது பயன்படும் என அவர் தெரிவித்தார்.

“மஇகா உறுப்பினர்களின் நன்மைக்காக, உடனடியாக கட்சி சொத்துக்களைத் திரும்ப ஒப்படைக்குமாறு கட்சியின் முன்னாள் தலைவர் சாமிவேலு மற்றும் இந்நாள் தலைவர் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் உட்பட, எம்.ஐ.இ.டி. குழுவின் 59 உறுப்பினர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.”

“மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் மஇகாவால் இயங்க முடியாது எனப் பலர் கருதுகின்றனர். மஇகா திவாலாகிவிடும் என சிலர் நம்புகிறார்கள். எனினும், டேஃப் கல்லூரி, சொந்த கட்டிடம் மற்றும் நாடு முழுவதும் சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட RM3 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் கட்சிக்கு உள்ளது,” என்று ஓர் ஊடக மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சி முதலீடு செய்த 17 மில்லியன் ரிங்கிட் தொகையையும் எம்.ஐ.இ.டி. திருப்பிக் கொடுக்க வேண்டுமென கேபி சாமி கூறியுள்ளார்.

“சாமி வேலு காலத்திலேயே, மத்தியப் பணிக்குழு உறுப்பினராக நான் இருந்தபோது இதனைப் பற்றி நான் பேசியிருக்கிறேன். இருப்பினும், அப்போது கட்சி உறுப்பினர்களிடமிருந்து எந்த ஆதரவும் இல்லை. ஆனால், இப்போது மஇகா வைப்புத் தொகையை மீட்டெடுப்பது அவசியமாகிறது.”

“அமானா சஹாம் வவாசானில் RM17 மில்லியனை முதலீடு செய்ய நான் பரிந்துரைக்கிறேன். ஆறு விழுக்காடு வட்டி விகிதத்தில், ஆண்டுக்கு RM1.1 மில்லியன் திரும்பப் பெற முடியும். கட்சியின் தொடர் நடவடிக்கைகளுக்கு இது போதுமானது,” என்றார் அவர்.

மேலும், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் பற்றி கேட்க எந்தவொரு தனிநபருக்கும் உரிமை இல்லை, காரணம் முந்தைய பிஎன் அரசாங்கம் மற்றும் மஇகா கிளைத் தலைவர்கள், கட்சிக்கும் இந்தியர்களின் மேம்பாட்டிற்கும் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை நன்கொடையாக அளித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

“ஆனால், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தால் இலாபமடைந்தது வாரிய உருப்பினர்களுக்கு நெருக்கமானவர்களே அன்றி, கட்சி அல்ல.”

“மஇகாவுக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளையும் திரும்ப ஒப்படைக்க, மஇகா தலைமைக்கும் எம்.ஐ.இ.டி. வாரியத்திற்கும் 21 நாள்கள் அவகாசம் கொடுக்கிறேன். அவ்வாறு செய்யத் தவறினால், நானும் சில மஇகா உறுப்பினர்களும் நீதிமன்றத்திற்கு இந்த விவகாரத்தை எடுத்துச் செல்வோம்,” என அவர் மேலும் கூறினார்.

-பெரித்தா டெய்லி