பக்கத்தான் ஹரப்பானின் புதிய அமைச்சரவையில் கல்வி அமைச்சர் பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதாக பிரதமர் மகாதிர் இன்று அறிவித்தார்.
இந்த நாட்டில் ஏராளமானோர் கல்வி கற்காதவர்களாக இருக்கிறார்கள். அதனால் நான் கல்வி அமைச்சர் பதவியை எடுத்துக் கொண்டேன். அதன் மீது நான் கவனம் செலுத்த முடியும் என்று நகைச்சுவையோடு அவர் பெட்டாலிங் ஜெயா பெர்சத்து தலைமையகத்தில் இன்று ஹரப்பான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“அதற்கும் அப்பால், நமது கற்பிக்கும் முறை காலத்திற்கு ஒவ்வாததாகி விட்டதாக நான் கருதுகிறேன்.
“இன்று, கணினி மற்றும் இதரவற்றுடன் நாம் புதிய கற்பிக்கும் முறையை உருவாக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
மகாதிர் 1974 ஆம் ஆண்டிலிருந்து 1977 ஆம் ஆண்டு வரையில் கல்வி அமைச்சராக இருந்துள்ளார்.
அதே செய்தியாளர் கூட்டத்தில், துணைப் பிரதமராக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் வான் அசிஸா வான் இஸ்மாயில் மகளிர் விவகாரங்கள் மற்றும் பொதுநலன்கள் ஆகியவற்றுக்கான அமைச்சுக்கு தலைமை ஏற்பார் என்றும் மகாதிர் அறிவித்தார்.
எதிர்வரும் திங்கள்கிழமை மொத்தம் 13 அமைச்சரவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வர் என்று அவர் தெரிவித்தார். அமைச்சரவை 25 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
அதே நேதத்தில், இந்தியச் சமூகம், இளைஞர்கள், மகளிர் மற்றும் ஓராங் அஸ்லி ஆகியோர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் கையாள்வதற்காக அமைக்கப்படவிருக்கும் பணிப்படைக்கு தலைமை ஏற்கப் போவதாக மகாதிர் அறிவித்தார்.
பணிப்படையில் உள்துறை மற்றும் தற்காப்பு ஆகிய அமைச்சுகளும் சம்பந்தப்பட்டிருக்கும். இந்நடவடிக்கை பக்கத்தான் ஹரப்பான் அதன் ஜிஇ14 தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகும் என்றாரவர்.