யாங் டி-பெர்த்துவான் அகோங்கிடம் மலேசிய அமைச்சரவையின் பட்டியலை வழங்க, இன்று மாலை அவரைச் சந்திக்கவிருக்கிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட்.
இன்று மாலை 5 மணியளவில், இஸ்தானா நெகாராவில் அச்சந்திப்பு நிகழும் என பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
“டாக்டர் மகாதிர், அவர் தரப்பு முன்மொழிந்த அமைச்சரவை பட்டியலை அகோங்கிடம் சமர்ப்பிப்பார்,” என்று அவர் கூறினார்.
கடந்த மே 10-ம் தேதியன்று, பேரரசர் முன்னிலையில் டாக்டர் மகாதிர் பிரதமராகப் பதவி உறுதிமொழி எடுத்துகொண்டார்.
அதன் பின்னர், அவர் மூன்று அமைச்சுகளின் வேட்பாளர் பட்டியலை அறிவித்தார், முஹைடின் யாசின் உள்துறை அமைச்சர் (பெர்சத்து) , நிதியமைச்சராக லிம் குவான் எங் (டிஏபி) மற்றும் பாதுகாப்பு அமைச்சராக முகமட் சாபு (அமானா) ஆகியோர்.
நேற்று, டாக்டர் மகாதிர் தன்னைக் கல்வி அமைச்சராக அறிவித்ததோடு, துணைப் பிரதமர் டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயிலிடம் மகளிர் விவகார அமைச்சைப் பராமரிப்பதற்கான பொறுப்பையும் வழங்கினார்.
பேரரசரின் அனுமதியைப் பெற்ற பிறகு, சத்தியப் பிரமாணம் 21 மே அன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாதிரின் கூற்றுப்படி, 13 பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் முன்னதாக அமைச்சரவையை நிரப்ப நியமிக்கப்படுவார்கள், அதன்பிறகு மற்ற நியமனங்கள் செய்யப்படும்.
நஜிப் இரசாக்கின் அரசாங்கத்திற்கு எதிராக அமைச்சரவையின் அளவைக் குறைப்பது, ஏழாவது பிரதமரின் திட்டங்களில் ஒன்றாகும்.
தொடக்கமாக, டாக்டர் மகாதிரின் நிர்வாகத்திற்கு 25 அமைச்சர்கள் உதவி செய்வார்கள்.