மலேசியத் தொழிலதிபர் ராபர்ட் குவோக், அரசாங்க ஆலோசனைக் குழு (சிஇபி) மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென மக்களைக் கேட்டுக்கொண்டார்
“மலேசியாவின் சிறந்த மக்களில் இருந்து, துன் டைம் ஜைனூடின், ஷேட்டி அக்தர் அஜீஸ், ஹாசன் மாரிகான் மற்றும் பேராசிரியர் டாக்டர் ஜோமோ குவாமெ சுந்தரம் ஆகிய சிறப்பான நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
“அவர்களை நம்புங்கள். நாம் அனைவரும் நம் நாட்டை வளமாக்க விரும்புகிறோம், மக்களின் நலனையும் பாதுகாக்க நினைக்கிறோம்,” என்று இன்று கோலாலம்பூரில் நடந்த சிஇபி கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
கடந்த மே 12-ல், 94 வயதான அந்த செல்வந்தரைப் பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட், சிஇபி உறுப்பினராக நியமித்தார். காலை 10 மணியளவில், கோலாலம்பூரில் உள்ள மெனரா இல்ஹாம்-க்கு வந்த அவர், மாலை 5 மணியளவில் அக்கட்டிடத்தை விட்டு வெளியேறினார்.
இதற்கிடையில், எரிபொருள் மானியங்கள் மற்றும் டோல்களை அகற்றுதல் போன்றவை, இன்றையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என டாய்ம் தெரிவித்தார்.
நாட்டின் கடன்கள் ஒரு டிரில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது என்ற துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் அறிக்கை பற்றி விவாதித்தனரா என்று கேட்டதற்கு, அவர் ‘இல்லை’ எனப் பதிலளித்தார்.
-பெர்னாமா