கடந்த இருபது ஆண்டு காலத்தில் இரு துருவங்களாக இருந்த மகாதிர் முகமட் மற்றும் அன்வார் இப்ராகிம் ஆகிய இருவரும் தற்போது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் ஒன்றிணைந்துள்ளனர். மேலும், மகாதிரின் வாரிசாகவும் அதன் அடிப்படையில் அடுத்த பிரதமராகவும் அன்வார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில், மகாதிர் ஒரு சர்வாதிகாரி என்றும், பல தவறான செயல்கள் , ஊழல்கள் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தல் போன்ற பல குற்றங்களை அவர் புரிந்துள்ளார் என்றும் மகாதிர் மீது அன்வார் குற்றம் சாட்டியுள்ளார்.
இக்குற்றச்சாட்டுகள் பற்றி குடையப்பட்ட போது, அன்வார் கூறினார்: “நீங்கள் கடந்த காலத்தை அழித்து விட முடியாது, ஆனால் நீங்கள் நியாயமானவராக இருந்து ஒரு புதிய எதிர்காலத்தை வரைய முடியும்.”
அராப் நியுஸிடம் பேசிய அன்வார், மகாதிர் கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்குப் பல பரிகாரங்களைச் செய்துள்ளார். மேலும், நாட்டின் நலன் கருதி அவர் அவ்வழியே செல்ல விரும்புகிறார் என்றாரவர்.
தமக்கும் மகாதிருக்குமிடையில் இருக்கும் வேறுபாடுகளை விட நாட்டைப் பாதுகாப்பது முக்கியமாகும் என்று அன்வார் சுட்டிக் காட்டினார்.
தேர்தல்கள் அல்லது போராட்டம் தம்மைப் பற்றியதல்ல என்று கூறிய அன்வார், அது நாட்டைப் பாதுகாப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதாகும். அது மகாதிருடன் இணைந்து பணியாற்றுவது என்றால், அது எனக்கு ஏற்புடையதே என்று அன்வார் மேலும் கூறினார்.
‘நஜிப் என்னைவிட நன்றாக நடத்தப்படுகிறார்’
1எம்டிபி சார்ந்த விசாரணையில் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் தம்மை நல்லபடியாக நடத்தப்படவில்லை என்று நஜிப் கூறிக் கொண்டிருப்பது குறித்து கருத்துரைத்த அன்வார், தானும் அதை அனுபவித்துள்ளதாகவும், அந்த இக்கட்டான நிலையைத் தம்மால் புரிந்துகொள்ள முடிகிறது என்றார்.
ஆனால், தமக்குத் தெரிந்த வரையில் நஜிப் நல்லபடியாக நடத்தப்படுகிறார் என்று அன்வார் தெரிவித்தார்.
சட்ட ஆளுமை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அதை 1எம்டிபி விசாரணைக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.