ஜஸ்டோ : நான் தரவுகளைத் திருடவில்லை, யாரையும் மிரட்டவில்லை!

நேர்காணல் : பெட்ரோ சவுடி இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி சேவியர் ஆண்ட்ரே ஜஸ்டோ, தனது முன்னாள் முதலாளியிடம் இருந்து எந்தத் தரவுகளையும் தான் திருடவில்லை என வலியுறுத்தினார்.

உண்மையில், தாய்லாந்து சிறையில் இருந்தபோது, தனக்கு அழுத்தம் கொடுத்ததாலேயே, அனைத்தையும் ஒப்புக்கொண்டு, ஆவணங்களில் கையொப்பமிட்டதாக, நேற்று மலேசியாகினி உடனான ஒரு நேர்காணலில் ஜஸ்டோ தெரிவித்தார்.

கடந்த 2015-ல், தனது முன்னாள் முதலாளியை மிரட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தாய்லாந்தில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஜஸ்டோ, அவருக்கு 1எம்டிபி தரவுகள் எவ்வாறு கிடைத்தது என்றும் கூறினார்.

2011-ஆம் ஆண்டில், பெட்ரோ சவுடியிலிருந்து விலகியபோது, “காப்பீடு” என்ற பெயரில், மின்னஞ்சலின் வழி அந்த நகலைப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.

அந்த நேரத்தில், செப்டம்பர் 28, 2009 அன்று நடந்த ஒரு கூட்டு முயற்சிக்காக, 1எம்டிபி-இல் இருந்து, $1 பில்லியன் அமெரிக்க டாலர் பெட்ரோ சவுடிக்கு வழங்கப்பட்டிருந்தது என்று ஜஸ்டோ கூறினார்.

இதன் விளைவாக, அக்கூட்டு முயற்சியில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை ஜஸ்டோ உணர்ந்ததாகவும், அதில் அவருக்குத் தொடர்பு இல்லை என்பதை அந்த மின்னஞ்சல் வழி நிரூபிக்கவும் அவர் விரும்பியதாகவும் கூறினார் – நிறுவனத்தின் சார்பாக ஆவணங்களில் கையொப்பமிடும் அதிகாரம் கொண்ட ஓர் அதிகாரியாக அவர் இருந்ததால்.

“பணம் எல்லா இடங்களிலும் இருந்தது. அவர்கள் வீடுகளை வாங்கினார்கள், வாடகைக்கு ஆடம்பரக் கப்பல், தனியார் ஜெட் போன்றவற்றை எடுத்தார்கள், கேளிக்கை விருந்துகளில் ஈடுபட்டனர்.

“அந்த நேரத்தில், தாரெக் உடனான எனது உறவு மகிழ்ச்சியாக இல்லை. நாங்கள் நண்பர்களாக இருந்திருக்க வேண்டும், ஆனால் சிலர் நிறைய பணம் வந்துவிட்டால், பைத்தியக்காரர்கள் ஆகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

பெட்ரோ சவுடிக்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும், பில்லியன் கணக்கான டாலர்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு வணிக ஒப்பந்தமும் இல்லை, ஏனெனில் அது ஒரு ‘போலி நிறுவனம்’, அது செயல்படவில்லை அல்லது சரியான வியாபாரத்தை நடத்தவில்லை என ஜஸ்டோ சொன்னார்.

2009-ஆம் ஆண்டில், 1எம்டிபி-உடன் கூட்டு முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்னதாக, பெட்ரோ சவுடி ரியாட், ஜெனீவா மற்றும் லண்டனில் மட்டுமே அலுவலகங்கள் மற்றும் சில ஊழியர்களைக் கொண்டிருந்தது, அவர்கள் ஒரு வாரத்தில் , ஒன்று அல்லது இரண்டு தொலைபேசி அழைப்புகளுக்கு மட்டுமே பதிலளித்து வந்தனர் என்றார் ஜஸ்டோ.

பெட்ரோ சவுடியின் சட்டபூர்வமான ஒரே ஒரு நடவடிக்கை, வெனிசுவேலாவுடனான ஒரு பரஸ்பர ஒப்பந்தமாகும், அதுவும் இறுதியில் வெற்றி பெறவில்லை.

ஜஸ்டோவின் கருத்துப்படி, அந்நிறுவனமும் இரண்டு டிரெட்ஜர்கள் (டிரில்ஷிப்) மட்டும்தான் கொண்டிருந்தது. அதில் ஒன்று – 40 வயதான பெட்ரோ சவுடி டிஸ்கவர் – ஒரு பழைய, பயன்படுத்த இயலாத டிரெட்ஜர், அதனால் அதைப் பயன்படுத்த மறுத்திருக்கிறார்.

அந்த நேரத்தில், பெட்ரோ சவுடிக்கு இருந்த ஒரே ஒரு சொத்து, அதுவும் நிறுவனத்தின் பெயர் மட்டும்தான், என்று ஜஸ்டோ கூறினார்.

“பெட்ரோ சவுடி ஒரு நல்ல பெயர். நீங்கள் பெட்ரோ சவுடி என்ற பெயரைக் கேட்கும் போது, அது பெட்ரோனாஸ் அல்லது பெட்ரோபிராஸ் போல, ஓர் அரசு நிறுவனம் போல ஒலிக்கிறது.

“துருக்கிய இளவரசர் அதில் பங்குதாரர், ஆனால் அந்நிறுவனத்திற்குச் சவுதி குடும்பம், எண்ணெய் துறைகள் அல்லது சவுதி எண்ணெய் நிறுவனங்களில் எந்த அதிகாரப்பூர்வத் தொடர்பும் இல்லை.

“அவர்களுக்கு ஒரு நல்ல பெயர் உண்டு. அதுதான் அவர்களின் முக்கியச் சொத்து,” என்று ஜஸ்டோ கூறினார்.

பெட்ரோ சவுடியில் இருந்து விலகியப் பின்னர், ஜஸ்டோ தாய்லாந்து, கோ சாமூய்-க்குச் சென்றார்.

பின்னர், அங்கேயேத் திருமணம் செய்துகொண்டு, குடும்ப வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கினார்.

கோ சாமூய்-இல், ஓர் ஆடம்பர மாளிகையை உருவாக்க, தனது சொத்துக்களை அவர் விற்றுள்ளார். ஓய்வு பெற்றபின்னர், அந்தச் ‘சொர்க்கலோகத்தில்’ தனது இறுதி காலத்தைக் கழிக்க அவரது முன்னேற்பாடு அதுவாகும்.

அந்நேரத்தில், தனது முன்னாள் முதலாளியிடம் $2 மில்லியன் அமெரிக்க டாலர் கடனாகக் கொண்டிருந்ததோடு, அதைத் தீர்க்கும் முயற்சிகளிலும்  ஈடுபட்டிருந்ததாகவும் ஜஸ்டோ கூறினார்.

இருப்பினும், அம்முயற்சியில் தோல்வியுற்ற பிறகு, அவர் கிளேர் ரியுகாஸ்சல்-பிரவுன், சரவாக் ரிப்போர்ட் மற்றும் மலேசியாவில் இருக்கும் ஓர் ஊடக உரிமையாளரையும் அணுகியிருக்கிறார்.

அந்த இரண்டு நபர்களிடமும் சுமார் 230,000 மின்னஞ்சல்களின் நகல்களை ஜஸ்டோ கொடுத்துள்ளார்.

தொடக்கத்தில் ஊடக உரிமையாளர்களிடமிருந்து அவர் பணத்தைக் கேட்டதாகவும், பின்னர் ஆவணங்கள் அனைத்தையும் இலவசமாக வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.