கோலாலும்பூர் பெவிலியன் ரெசிடென்சில் போலீசார் சோதனையிட்ட கொண்டோ வீடுகளில் இரண்டு முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பிள்ளைகளான நூர்யானாவுக்கும் முகம்மட் அஷ்மானுக்கும் சொந்தமானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவது வீடு ஒரு டான்ஸ்ரீ-க்குச் சொந்தமானதாம். .கூட்டரசுப் போலீஸ் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் அமர் சிங் இதைத் தெரிவித்தார்.
ஆனால், அந்த டான்ஸ்ரீ யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
“அவ்வளவுதான் இப்போதைக்குக் கூற முடியும்”, என அமர் சிங் கோலாலும்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
மே 18-இல் நடந்த அச்சோதனையின்போது போலீசார் பணமும் நகைகளும் அடங்கிய 72 பைகளையும் கைப்பைகள் அடங்கிய 284 பெட்டிகளையும் எடுத்துச் சென்றனர்.
72 பைகளில் 35-இல் பல்வேறு நாட்டு பணநோட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரிம114 மில்லியன். இது கணக்கிடப்பட்டு விட்டது. ஆனால், மற்ற பைகளில் உள்ள நகைகள், கடிகாரங்கள் ஆகியவற்றின் மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை.