-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மே 27, 2018.
கடந்த 14வது பொதுத் தேர்தல் நாட்டுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். இதில் 60 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த ஒரு அரசாங்கத்தை மட்டுமின்றி, பாரிசானின் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பலரையும் மக்கள் தோற்கடித்துள்ளனர்.
இத்தேர்தல் தோல்வியை முன்னைய அரசாங்கத்தின் ஊதாரித்தனம் மற்றும் ஊழலோடு மட்டும் தொடர்பு படுத்திப் பார்க்காமல், இனவாத அரசியலுக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழுந்துள்ளதையும் கவனிக்க வேண்டும். இது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள பெரிய கொள்கை மாற்றத்தின் பிரதிப்பளிப்பு என்கிறார் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
குறிப்பாக நம்மவர்களில் பெரும் பகுதி மக்கள் இனவாத அரசியலில் நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதை இந்தியர்கள் பெரும் பகுதியினர் வாழும் சிலாங்கூர், பினாங்கு, பேராக், கெடா போன்ற மாநிலங்களில் 2008ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்.
அன்னியர்கள் ஆட்சிக்காலத்தில் நாட்டைச் சுரண்டவும், இந்நாட்டு மகளிடையே, வேற்றுமைகளை வளர்க்கவும், இன மற்றும் சமயப் பாகுபாடுகள் பயன்படுத்துவதைக் கொள்கையாகக் கொண்டிருந்தனர். ஆனால் நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் இந்த அரசு வேற்றுமைகளை விடாமல் கைபிடித்திருந்ததின் மர்மத்தை மக்கள் இப்பொழுது நன்கு புரிந்து கொண்டு விட்டனர்.
இன உணர்வுகளை, இன, சமய வேறுபாடுகளைச் சுயதேவைகளுக்காக, பதவி சுகங்களுக்காகத் திறமையற்ற ஒரு சுரண்டல் கூட்டம் சாதகமாகப் பயன்படுத்தி வந்ததன் காரணத்தால், இன்று நாடு திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ளதை மக்கள் புரிந்து கொண்டனர்.
ஆகையால் தேர்தல் தோல்வி மட்டுமின்றி, கொள்கை ரீதியாகவும் தோல்வி கண்டதுடன், மக்களின் நம்பிக்கைக்குப் புறம்பான ரீதியில், நாட்டைக் கொள்ளையடித்த கும்பலின் பிரதிநிதிகள் என்று தங்களைப் பிரகடனப் படுத்திக் கொள்ள எந்தக் கௌரவமான மனிதரும் விரும்ப மாட்டார்! என்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
அதனால் முன்னாள் அரசாங்கத்தை, கட்சியைப் பிரதி நிதிப்பதாக கூறிக் கொள்ளும் எவரும் ஆட்சி, அரசாங்கம், அரசாங்கச் சார்பு நிறுவனங்களில் பதவி வகிக்கும் தகுதியை இழந்து விட்டதால் அவர்கள் வகிக்கும் செனட்டர், மாவட்ட, மாநகர்மன்ற உறுப்பினர்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசாங்க ஆலோசனை மன்றங்கள், அரசாங்க இன, சமய, பாதுகாப்பு, கல்வி, பொருளாதார நிர்வாக மற்றும் ஆலோசனை மன்றங்களிலும் தொடர்ந்து பதவி வகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப, கொள்கை மாற்றங்களை எல்லா மட்டத்திலும் அறிமுகப்படுத்தவும், துடிப்புள்ள இளைஞர்களைக் கொண்டு பக்காத்தான் ஹராப்பான் அரசு புதிய தலைமுறைக்கும், இன்றைய நவீன உலக தேவைக்கும் ஏற்ப அனைத்தையும் விரைவில் மாற்றியமைக்க அவர்கள் வழிவிட வேண்டும் என்று கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.