அன்வார்: அரசாங்கத்திற்கு உதவும் கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு

 

தற்போதைய அரசாங்கம் அதன் கடமைகளை ஆற்றுவதற்கு உதவும் கடமை ஒவ்வொரு சாதாரண குடிமக்களுக்கும்கூட உண்டு என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.

பதவிகள் அல்லது செல்வ வளம் அல்லது அதிகாரம் கோராதீர்கள், ஏனென்றால் அது நமது போராட்ட உணர்வைப் பாழாக்கி விடும் என்று அன்வார் இப்ராகிம் நேற்று அவரது துணைவி வான் அசிஸா வான் இஸ்மாயிலுடன் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.

பிரதமர் மகாதிர் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்திற்கு வருமானம் மற்றும் பொருள் வள ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அளித்துள்ள அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கடப்பாடு இருக்கிறது என்று அன்வார் கூறினார்.

பேரரசரின் முழு மன்னிப்பைப் பெற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தாம் இப்போது ஒரு சாதாரண குடிமகன் என்று கூறிக்கொண்ட அன்வார் இப்ராகிம், “நமது கடமை (சாதாரண குடிமக்கள் என்ற முறையில்) அரசாங்கத்திற்கு உதவுவதாகும், அபோதுதான் அவர்களது கடமைகள் நிறைவேற்றப்படும்”, என்று அவர் மேலும் கூறினார்.

பாண்டான் தொகுதியில் துணைப் பிரதமர் வான் அசிஸா வான் இஸ்மாயில் எப்படி தமது கடமையை ஆற்றுகிறார் என்பதைக் கண்காணிக்கும்படி நான் ஒரு சாதாரண குடிமகன் என்ற முறையில் மக்களைக் கேட்டுக்கொள்வேன் என்று தாம் பிரதமர் மகாதிரிடம் கூறியுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.

கண்காணிப்பது இப்போது நமது கடமை. அவர்களைக் குறைகூறுவது மட்டுமல்ல, அவர்கள் தங்களுடையக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்களுக்கு நினைவூட்டுவதும் நமது கடமை என்றாரவர்.