வாக்களிப்பு நாளான மே 9-இல், காரைக் கொண்டு வாக்களிப்பு மையமொன்றில் காத்திருந்த வாக்காளர்கள்மீது மோத முயன்ற ஒரு குடும்பத் தலைவியை போலீஸ் கைது செய்ததாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் பூஸி ஹருன் இன்று கூறினார்.
பூச்சோங்கில், போலீஸ் சிறப்புப் பிரிவின் பயங்கரவாத- எதிர்ப்புப் படையால் கைது செய்யப்பட்ட அந்த 51-வயது பெண் முஸ்லிம்-அல்லாத வாக்காளர்கள்மீது காரைக் கொண்டு மோதத் திட்டமிட்டிருந்திருந்ததாக ஐஜிபி அறிக்கை ஒன்றில் கூறினார்.
பயங்கரவாதக் கும்பல் ஒன்றுடன் தோடர்புள்ளவர் என்றும் நம்பப்படும் அப்பெண், காரில் எரிவாயு தோம்புகளை ஏற்றிக்கொண்டு முஸ்லிம்- அல்லாதார் தொழுகை இல்லங்கள்மீது மோதவும் திட்டமிட்டிருந்தாராம்.
மார்ச் 27 தொடங்கி மே 9வரை , பயங்கரவாதக் கும்பல்களுடன் தொடர்புகொண்டவர்கள் என்ற ஐயத்தின்பேரில் மேற்குறிப்பிட்ட பெண் உள்பட 17க்கும் 51வயதுக்குமிடைப்பட்ட 15 பேரை கோலாலும்பூர், சிலாங்கூர், ஜோகூர் கிளந்தான், சாபா ஆகிய இடங்களில் போலீஸ் கைது செய்திருப்பதாக பூஸி தெரிவித்தார்.
கைதானவர்களில் அறுவர் மலேசியர், இருவர் நிரந்தர வசிப்பிடத் தகுதிகொண்ட பிலிப்பினோக்கள், வட ஆப்ரிக்காவைச் சேர்ந்த மணமான ஒரு தம்பதியினர், பிலிப்பீன்ஸ் நாட்டவர் நால்வர், வங்காள தேசி ஒருவர்.
பெர்னாமா