குலா: அரசாங்கம் மலேசிய இந்தியர் செயல்திட்டத்தை மறு ஆய்வு செய்யும்

பக்கத்தான்   ஹரப்பான்   அரசாங்கம்   முந்தைய   பிஎன்   அரசாங்கத்தால்   உருவாக்கப்பட்ட    மலேசிய   இந்தியர்    செயல்திட்ட(எம்ஐபி)த்தை   மறு  ஆய்வு    செய்யும்    என   மனித   வள  அமைச்சர்   எம்.குலசேகரன்   இன்று   அறிவித்தார்.

“எம்ஐபி-இல்  உள்ள   எல்லாமே   மறு ஆய்வு   செய்யப்படும்.

“அதன்  பின்னணியில்    வழக்கத்துக்கு  மாறாக   எதுவுமில்லை. அதில்  சில  விசயங்கள்   ஏற்கனவே   நாடாளுமன்றத்தில்    எழுப்பப்பட்டவைதான்”,  என  ஈப்போ  பாராட்  எம்பியுமான   குலசேசகரன்   கூறினார்.

கடந்த   ஆண்டு   ஏப்ரலில்    தொடங்கப்பட்ட   எம்ஐபி    அரசாங்கச்  சேவையிலும்    உயர்க்கல்விக்  கழகங்களிlலும்    இந்தியர்   பங்கேற்பை   ஏழு  விழுக்காடாக     உயர்த்தவும்    நாடற்றவர்களாக   உள்ள   இந்தியர்களுக்குக்   குடியுரிமை   கொடுக்கவும்     வழிவகை   காணப்படும்  என்றும்   உறுதி   கூறியது.

உயர்க்கல்வி  உதவிக்கு   ரிம40மில்லியன்   ஒதுக்கீடு   செய்யவும்   தொழில்முனைவர்களுக்கு   உதவ   ரிம500 மில்லியன் சுழல்  நிதி   அமைக்கவும்    இந்திய   சமூகத்தில்   குறைந்த   வருமானம்  பெறும்   40  விழுக்காட்டினருக்கு  உதவ   பெர்மோடாலான்   நேசனல்  பெர்ஹாட்டின்கீழ்   மேலும்  ஒரு  ரிம500  மில்லியன்  ஒதுக்கவும்    எம்ஐபி  வாக்குறுதி   அளித்தது.

திறன்  பயிற்சிகளின்   மூலம்  இந்திய  சமூகத்தை   திறன்வாய்ந்த   சமூகமாக   மாற்றி  அமைக்கப்போவதாகவும்   குலசேகரன்   உறுதி    கூறினார்.

இவ்விவகாரம்  தொடர்பில்  பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்டை   ஏற்கனவே   சந்தித்துப்   பேசியிருப்பதாகவும்    அவர்   கூறினார்.

“(இந்தியர்களில்)  பெரும்பாலோர்  வேலையில்லாதிருக்கிறார்கள்   அல்லது   மைய  நீரோட்டத்திலிருந்து  விடுபட்டிருக்கிறார்கள்.

“திங்கள்கிழமை  என்னைத்   தனிப்பட்ட  முறையில்   சந்தித்த  மகாதிர்   இவ்விவகாரத்துக்குத்   தீர்வுகாண  சிறப்பாக   ஏதாவது   செய்தாக   வேண்டும்   என்றார்.

“மனிதவள   அமைச்சர்    என்ற   முறையில்   தரம்  உயர்த்தி  திறன்களை  மேம்படுத்தி  இந்திய   தொழிலாளர்களை  உயர்வருமானம்   பெறுவோராக   உருமாற்ற  முயல்வேன்.  அதற்கு   ஆவன    செய்யுமாறு   என்  அமைச்சையும்  பணித்துள்ளேன்”,  என்றார்.