இரகசியமானவை என்று வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள ‘சிவப்புக் கோப்புகள்’ தெரிவிக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறுகிறார் நிதி அமைச்சர் லிம் குவான் எங்.
அவற்றில் உள்ள ஒப்பந்தங்கள் வழக்கத்துக்கு மாறானவை என்றும் அவை அரசாங்கத்துக்குச் சாதகமாக இல்லை என்றும் சினார் ஹரியானுக்கு வழங்கிய நேர்காணலில் குவான் எங் கூறினார்.
“அந்த ஒப்பந்தங்களை ஆராய்ந்து வருகிறோம். அவை வழக்கத்துக்கு மாறானவையாக உள்ளன. வழக்கமாக, கொடுக்கப்பட்ட வேலையில் 30 விழுக்காடு முடிந்திருந்தால் 30 விழுக்காடு பணம்தான் கொடுப்போம். அது இங்கு பின்பற்றப்படவில்லை.
“வேலையில் 30விழுக்காடு முடிக்கப்பட்டதற்கு 70விழுக்காடு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏன்?
“ஏனென்றால் காலவாரியாக பணம் கொடுப்பதற்கு ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆறு மாதத்துக்கு ஒருமுறை பணம் கொடுக்கப்படும் என்றால் வேலை முடிகிறதோ இல்லையோ பணம் கொடுத்தாக வேண்டும்”, என்றார். .
அவை எதற்காக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குத்தகையாளர்கள் யார் போன்ற விவரங்களை லிம் தெரிவிக்கவில்லை.
ஒப்பந்தங்களில் ஏற்கனவே கையொப்பமிட்டாயிற்று என்பதால் அவற்றை மாற்றவும் இயலாது என்றாரவர்.
“ஒப்பந்தங்கள் நாட்டின் நலனுக்கு உகந்தவையாக இல்லை என்பதால் ஏன் அப்படிப்பட்ட ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன என்பதை ஆராய்வோம்”, என்றவர் சினாரிடம் தெரிவித்தார்.
“சிவப்புக் கோப்புகள் முன்பு இரகசியம் என்று முத்திரை குத்தப்பட்டு தனியே வைக்கப்பட்டிருந்தன. இப்போது அவற்றைத் திறந்தாயிற்று உள்ளே இருக்கும் ஊழல்களைக் கண்டு அதிர்ந்து போனேன். அமைச்சு 1எம்டிபியின் கடன்களைக் கட்டி வந்துள்ளது போன்ற தகவல்கள் அவற்றில் உள்ளன.
“அரசாங்கம்தான் 1எம்டிபி கடன்களை இதற்குமுன் செலுத்தி வந்திருப்பதுபோல் தெரிகிறது. ஆனால், 1எம்டிபி இதுகாறும் தானே கடன்களைத் திருப்பிக் கொடுத்து வந்திருப்பதாகக் கூறிக்கொண்டிருந்தது.
“கடன்களில் ஒரு காசைக்கூட அவர்கள் திருப்பிக் கொடுக்கவில்லை”, என்றாரவர்.
1எம்டிபியின் கடனில் ரிம7பில்லியனை நிதி அமைச்சுதான் செலுத்தியது. இதில் கடனுக்கான வட்டியைச் சேர்க்கவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார். இது 1எம்டிபிக்காக மக்கள் பணம் எவ்வளவு இழக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது என்றார்.
“இப்பணத்தை நல்ல முறையில் முதலீடு செய்து மக்களுக்காக பயன்படுத்திக் கொண்டிருந்தால் எத்தனை பிரச்னைகளைத் தீர்த்திருக்கலாம்?.
“அதற்கு மாறாக, 1எம்டிபி ஊழலால் நம் பொருளாதாரம்தான் பாதிக்கப்பட்டுள்ளது”, என்று லிம் கூறினார்.
அதற்குதானே இரகசிய பாதுகாப்பு சட்டம் தேவைப்படுகின்றது!
மலேசியா மேலும் ஒரு படி உயர வேண்டுமானால் இத்தகையச் சட்டங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுத்தக் கட்டுப்படுத்த வேண்டும். அதை விடுத்து ஊழலை மறைக்கப் பயன்படும் வகையிலிருக்கும் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.