உபர், கிரேப் வாகனம் போன்ற அனைத்துலக நிறுவனங்களை அனுமதித்து, நாட்டிலுள்ள அனைத்து வாடகை வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை படுமோசமான சூழலுக்கு தள்ளிய ஆதிக்க அரசு பொறுப்பாளர்களுக்கு எதிராக பேராக் மாநில வாடகை வாகன ஓட்டுனர் சங்கம் ஈப்போ தலைமை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக அதன் செயலாளர் திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் உபர், கிரேப் வாகன சேவையை முந்தைய அரசு அறிமுகப் படுத்திய நாள் முதல் இன்றுவரை வாடகை வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடனாளியாக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.
தனி நபர்கள் சுய லாபத்திற்காக கொண்டு வந்த இத்திட்டத்தால், இதையே பணியாக கொண்ட வாடகை வாகன ஓட்டுனர்களின் குடும்பங்கள் வறுமையில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கின்றன என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்றார்.
மாதம் 2,000 முதல் 3,000 வரை வருமானம் ஈட்டிய ஓட்டுனர்கள் இன்று நாளுக்கு 70 வெள்ளி தேடுவதே அரிதாக இருப்பதால் எத்தனையோ ஓட்டுநர்கள் இத்தொழிலே வேண்டாமென தொழிற்சாலை வேலைக்கு போய்விட்டனர் என்றார்.
வாடகை வீட்டில் இருக்கும் வாடகை வாகன ஓட்டுனர்களும் வாடகை உரிமத்தை வைத்து ஓடும் ஓட்டுனர்களும் மாத வாடகை செலுத்த இயலாத நிலையில் 6 மாதத்திற்கு ஒருமுறை வாகன பரிசோதனை செலவுகளுக்கும் சாலை உரிமம், காப்புறுதி, வண்டி சக்கரம் மற்றும் பழுதுபார்ப்பு என பல்வேறு சுமைகளை தாங்கியும் இதனால் சில வேளைகளில் பெறப்படும் சம்மன்களையும் கட்ட முடியாத சிரமத்தில் அல்லல்படுகிறார்கள் என்றார்.
ஆகையால் கடந்த 19-ஆம் தேதி ஈப்போ ரிசிபவன் உணவகத்தில் தலைவர் திரு. செயபிரகாசு மற்றும் திரு. சுப்ரா தலைமையில் பேராக் தமிழ்/இந்திய வாடகை வாகன ஓட்டுனர்கள் ஏற்பாடு செய்த சந்திப்பு கூட்டத்தில், தற்போது வாடகை வாகன ஓட்டுனர்கள் எதிர்நோக்கும் அனைத்து சிக்கல்களையும் அதை எப்படி களைவதென்றும் பேசப்பட்டதில் நாடு முழுவதிலும் உள்ள அந்தந்த வாடகை வாகன சங்க பிரதிநிதிகள் சுமார் 150 பேர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
உபர், கிரேப் வாகன சேவையை எதிர்த்து காவல் துறை புகாரை கண்டு, அதை பயன்படுத்துவோர்களும் அதன் ஓட்டுனர்களும் எங்கள் மீது பகைமை கொள்ளளாம் அல்லது தூற்றலாம். ஆனால், உங்கள் வசதிக்கும் வருவாய்கும் ஒரு தொழில் துறையே அழிகிறது. அத்துறை சார்ந்த பல்லாயிரம் ஓட்டுனர்கள் நசுக்கப் படுகிறார்கள் உங்களால் என்பதை மறந்து விடாதீர்கள் என்று பதிவு செய்தார்.
ஆகவே பொது மக்களுக்கு சேவை செய்து வரும் வாடகை வாகன ஓட்டுனர்களின் மேல் அக்கறை கொண்டு அவர்கள் குடும்பத்தையும் எதிர்காலத்தையும் புதிய அரசு சீர்தூக்கி பார்க்க வேண்டும் அதே வேளையில் எங்கள் சிக்கல்களுக்கு நிரந்தரமாக தீர்வு காண உபர், கிரேப் சேவையை மறுபரிசீலனை செய்து எங்கள் வாழ்வாதாரம் நிலை பெற நல்வழி ஏற்படுத்தி தர வேண்டுமாய் புதிய அரசிடம் சங்க சார்பில் கோரிக்கை வைப்பதாக பேராக் மாநில வாடகை வாகன ஓட்டுனர்கள் சங்க செயலாளரும் சுங்கை சிப்புட் வாடகை சங்கம் துணை தலைவருமான திரு பாலமுருகன் வீராசாமி கேட்டு கொண்டார்.