அம்னோ தலைவராக பொருத்தமானவராக மகாதிரால் வருணிக்கப்பட்ட கேஜெ-யை வறுத்தெடுத்தார் டயிம்

1எம்டிபி  தொடர்பில்   அம்னோ  இளைஞர்   தலைவர்    கைரி  ஜமாலுடின்மீது   சரமாரியாகக்   குறைகூறுகிறார்   டயிம்   சைனுடின்.

முன்னாள்     நிதி  அமைச்சரான  டயிம்,    14வது  பொதுத்   தேர்தலில்   தோல்வி  கண்ட    அம்னோ   புத்துயிர்  பெறுவதை   அம்னோ  இளைஞர்     பிரிவு   விரைவுபடுத்துமா  என்பது  குறித்து    கருத்துரைத்தார்.

“அது   சிரமமாகும்.  இளைஞர்   பிரிவு   மொத்தமும்   அப்போது  1எம்டிபி-க்கு  வக்காலத்து   வாங்கியது.

“அமெரிக்க   நீதித்துறை   அறிக்கை,  பொதுக்கணக்குக்  குழு    அறிக்கை,   தலைமைக்  கணக்காய்வாளர்    அறிக்கை    ஆகியவற்றைப்   படித்த  பின்னரும்,   இழைக்கப்பட்ட   குற்றங்களுக்கு    ஆதரவு     தெரிவிக்கிறார்கள்   என்றால்   அவர்கள்   இந்நாட்டு   இளைஞர்களுக்கு   முன்மாதிரியாக   இருக்க  முடியாது.

“அவர்கள்   வருத்தப்படுவதாகக்   காண்பித்துக்கொள்ளவே   இல்லை.    இப்போதைய   தலைவர்களைக் கொண்டு  அவர்கள்   அரசாங்கத்தைத்   திரும்பக்  கைப்பற்றுவது   சந்தேகமே”, என  டயிம்  த   ஸ்டாரிடம்  கூறினார்.

பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்   அம்னோ  தலைவராவதற்கு   கைரிதான்  பொருத்தமானவர்   என்று   கூறிய   மறுநாள்       டயிமின்   நேர்காணல்   வெளியிடப்பட்டிருந்தது.

முன்னாள்   இளைஞர்,  விளையாட்டுத்   துறை   அமைச்சரான   கைரி   எதிர்வரும்   அம்னோ   கட்சித்  தேர்தலில்   உதவித்    தலைவருக்குப்    போட்டியிடுவார்   என   எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎன்மீது  மக்களுக்கு   நம்பிக்கை   இல்லாமல்  போய்விட்டது     என்று   டயிம்  கூறினார்.

“ஒரு  நல்ல   எதிர்க்கட்சியாக   விளங்க  வேண்டுமானால்   அவர்கள்மீது   நம்பிக்கை   வரவேண்டும்.  பிஎன்னிடம்    என்ன   நம்பகத்தன்மை   உள்ளது?  அது   இல்லையென்றால்   மக்கள்   நம்ப  மாட்டார்கள்”,   என்றார்.