அறிக்கை : இன்றிரவு அன்வார் பேரரசரைச் சந்திக்கிறார்

சட்டத்துறை தலைவராக டோனி தோமஸ் நியமனம் தொடர்பான சிக்கலைத் தீர்க்க, இன்றிரவு அன்வார் யாங் டி-பெர்த்துவான் அகோங்கை சந்திக்கவுள்ளார்.

அப்பதவியில் இஸ்லாம் அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டாலும், மலாய்க்காரர்களின் சிறப்புரிமையில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று அந்த பிகேஆர்  நடப்பில் தலைவர் உறுதியளித்தார்.

“கொஞ்சம் செல்வாக்குடைய, சாதாரண மக்களில் ஒருவனாக, (மலாய் ஆட்சியாளர்களுடன்) அவருடன் விவாதிப்பதும் சமாதானப்படுத்துவதும் என்னுடைய பணியாகும்.

“கடந்த 60 ஆண்டுகளில், அரச குடும்பத்தினர் அம்னோ மற்றும் பாரிசான் நேஷனல் தலைவர்களுடன் ஒத்துழைத்து வந்துள்ளனர் என்பதை நான் அவருக்கு எடுத்துச் சொல்வேன்.

“இப்போது சூழல் மாறிவிட்டது, ஆனால் அரசியலமைப்புச் சட்டம் மாறவில்லை. மலாய் அரசர்களின் நிலையில் மாற்றம் இல்லை. ஆக, இதுபோன்ற பிரச்சனைகளைப் பேசி தீர்க்க முடியும்”, என அன்வார் கூறியதாக தி மலேசியன் இன்சைட் செய்தி வெளியிட்டுள்ளது.

அரச மன்னிப்பில் சிறையிலிருந்து விடுதலையான அன்வார், இதுவரை 7 சுல்தான்களைச் சந்தித்துவிட்டார், நேற்றிரவு இரண்டாவது முறையாகச் சந்தித்த ஜொகூர் சுல்தான் உட்பட.

நாளை கூடவிருக்கும் மலாய் மன்னர்கள் மாநாட்டில், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த

கிறிஸ்துவரான டோமி தோமஸ், சட்டத்துறை தலைவராக நியமிக்கப்படுவது பற்றி விவாதிக்கப்பட்டு, முடிவெடுக்கப்படும்.

சட்டத்துறை தலைவராக தோமஸ்சை பிரதமர் மகாதிர் தேர்ந்தெடுத்தது, பிரதமரின் சிறப்பு அதிகாரத்திற்கு உட்பட்டதாகும், அதனை நாம் மதிக்க வேண்டும்.

“அதுபற்றி கலந்துரையாடுவது தவறல்ல, ஆனால் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

“ஜனநாயக ஆட்சிமுறை அமைப்பில், இறுதியில் பிரதமரின் முடிவுதான் ஏற்கப்படும்.

ஷரியா அடிப்படையிலான விஷயங்களில், முஸ்லிம் அல்லாத சட்டத்துறை தலைவர் மலாய் அரசர்களுக்கு ஆலோசனை வழங்க முடியாது என்பதனையும் அன்வர் ஒப்புக்கொண்டார்.