அன்வார் இப்ராகிம் இன்னும் சில மாதங்களில் இடைத் தேர்தல் ஒன்றின் வழியாக நாடாளுமன்ற உறுப்பினராக திரும்பிவர திட்டமிடுகிறார்.
அவரை எந்த இடத்தில் போட்டியிட வைப்பது என்பதை அவரது கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை.
ஆனால், அவர் பாண்டான் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை. பாண்டான் தொகுதியின் இப்போதைய எம்பி அன்வாரின் துணைவியாரும் துணைப் பிரதமருமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்.
“பாண்டானில் போட்டியிடுவதில் ஒரு பிரச்னை. அதற்காக வான் அசிசா துணைப் பிரதமர் பதவியைத் துறக்க வேண்டியிருக்கும். அதனால் அங்கே பிகேஆரின் இடம் காலியாக இருக்கும்”, என அன்வார் கூறினார்.
மே 15-இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அன்வார் முழு அரசியலுக்குத் திரும்புவதற்குமுன் வெளிநாட்டுப் பயணங்கள் சிலவற்றை மேற்கொள்ள வேண்டி இருப்பதாகக் கூறினார்.
“அடுத்த வாரம் லண்டன் சென்று (முன்னாள் அமெரிக்க துணை அதிபர்) அல் கோரைச் சந்திப்பேன். ஹரி ராயாவுக்குப் பின் அதிபர் எர்டோகனைச் சந்திக்க துருக்கி செல்வேன். அவர் வரச் சொல்லி மூன்று தடவை நினைவுபடுத்தி விட்டார்”, என்றாரவர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அன்வாருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“இப்பயணங்களை எல்லாம் முடித்துக்கொண்டு சில மாதங்களில் இடைத்தேர்தலுக்குத் தயாராகி விடுவேன்”, என்றவர் சொன்னார்.