வார இறுதியில் கேட்கப்பட்டபோது தெங்கு ரசாலி, ஜூன் 23 அம்னோ கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து இன்னும் பரிசீலித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
அதன் பின்னர் பார்த்தால் பல தரப்பினரும் 81-வயது நிரம்பிய ரசாலிதான் அம்னோ தலைவராவதற்குப் பொருத்தமானவர் என்று குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.
அவரது குவா மூசாங் அம்னோ தொகுதியைப் பொறுத்தவரை, 14வது பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்த பிஎன்னைத் தூக்கி நிறுத்த தெங்கு ரசாலியை விட்டால் வேறு ஆள் இல்லை என்று உறுதியாககக் கூறுகிறது.
அத்தொகுதியைச் சேர்ந்த மஹமட் நாபி நாசிர், குலீ என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் தெங்கு ரசாலி கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்பதால் அவரால் அம்னோ உறுப்பினர்கள் ஊக்கம் பெறுவார்கள் என்றார்.
“மலாய்க்காரர்களை ஒன்றிணைப்பதுடன் 1எம்டிபியுடன் சம்பந்தப்படாதவர் என்பதால் அவ் விவகாரத்தையும் அவரால் சமாளிக்க முடியும்”, என்றவர் சொன்னதாக சினார் ஹரியான் கூறியது.
அதே போன்ற கருத்தைத் தெரிவித்த அத்தொகுதி செயல்குழு உறுப்பினரான வான் ஸவாவி ஜைன், அம்னோ தலைமைத்துவத்தில் நிலவும் வெற்றிடத்தை நிரப்ப தெங்கு ரசாலியே பொருத்தமானவர் என்றார்.
“அம்னோ தலைமைத்துவம் முழுவதுமே ஒரு தலைவரைத் தேடுகிறது. அவர் கிடைக்கும்வரை தெங்கு ரசாலி அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்”, என்றார்.