ரோஸ்மாவிடம் எம்ஏசிசி 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் பிரதமரின் மனைவி, ரோஸ்மா மன்சோர், புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகக் கட்டடத்தில் சுமார் ஐந்து மணி நேரம் செலவிட்டார், அங்கு அவரிடம் எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் நிறுவனம் பற்றி வினா எழுப்பப்பட்டது.

பேச்சுவார்த்தை மூன்று மணி நேரம் நீடித்தது, ரோஸ்மாவுக்கு ஓய்வு மற்றும் பிரார்த்தனைக்கு நேரமும் வழங்கப்பட்டது.

3.45 மணிக்கு, எம்ஏசிசி கட்டிடத்திலிருந்து வெளியேறி, நிருபர்களிடம் பேசாமல், நேரே காரில் ஏறிச் சென்றார் ரோஸ்மா.

இன்று காலை, அவர் 10.45 மணியளவில் எம்ஏசிசி தலைமையகம் வந்தார். அவரிடம், எம்ஏசிசி மேற்கொள்ளும் முதல் விசாரணை இதுவாகும்.

ரோஸ்மாவுடன் அவரின் மகள் நூர்யனா நஜ்வா, மருமகன் டெனியர் கீசிபெயெவ் மற்றும் அவரின் வழக்கறிஞர்கள் கே.குமரேந்திரன், கீதன் ராம் வின்செட்ன் ஆகியோரும் இருந்தனர்.

காலை முதல், உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் எம்ஏசிசி தலைமையகத்தில் செய்திக்காகக் காத்துக்கிடந்தன.

இதற்கு முன்னர், எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து தனது சொந்த வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட தொகை குறித்து, நஜிப்பிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“ரோஸ்மாவிடம் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்,” என்று முன்னாள் எம்ஏசிசி புலனாய்வு மற்றும் உளவுத்துறை இயக்குனர் அப்துல் ரசாக் இட்ரிஸ் கூறினார்.

“தனது வங்கிக் கணக்கை வெளிப்படுத்தவும், சமீபத்தில் இரண்டு வீடுகளிலிருந்து காவல்துறையினர் கைப்பற்றிய பணம் மற்றும் நகைகள் பற்றிய விளக்கமும் அவரிடம் கேட்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், நிருபர்களிடம் பேசிய கே.குமரரேந்திரன், எம்ஏசிந்க்கு ரோஸ்மா நல்ல ஒத்துழைப்பை வழங்கியதாக தெரிவித்தார்.

இருப்பினும், விசாரணைக்காக ரோஸ்மா மீண்டும் அழைக்கப்படுவாரா என்ற கேள்விக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.