பினாங்கில், கட்டாய வெளியேற்றத்தை எதிர்த்து போராடிய இருவர் கைது

இன்று காலை, பாடாங் தேம்பாக், ஆயேர் ஈத்தாமில், பொது குடியிருப்பு வீடுகளில் (பிபிஆர்) இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள் மேற்கொண்ட போராட்டத்தில், போலிசாரால் இருவர் கைது செய்யப்பட்டனர் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்திய செயலவை உறுப்பினர் சூ சோன் காய் கூறினார்.

பி.எஸ்.எம். கட்சி உறுப்பினர் கார்த்திகேஸ் இராஜமாணிக்கம் மற்றும் குடியிருப்பாளர் ஒருவரின் நண்பரான நாதன் முனுசாமி இருவரும் ஆயேர் ஈத்தாம் காவல்நிலையத்தில் நண்பகல் 12 மணி வரை தடுத்து வைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

“வெளியேற்றப்பட்ட குடும்பங்கள், கடந்த டிசம்பர் முதல், மாநில வீட்டுவசதி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்டிப் சிங் டியோவுடன் ஒரு சந்திப்புக்காக காத்திருக்கின்றனர்,” என்றார் சூ.

வெளியேற்றப்பட்ட குடும்பங்கள், பின்னர் கொம்தாரில் உள்ள ஜக்டீப்பின் அலுவலகத்திற்கு வெளியில் காத்திருந்தனர்.

கார்த்திகேஸ் & நாதன்

இரவு 9.10 மணியளவில், கைதான இருவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

பினாங்கில் பிபிஆர் வீடுகளுக்காகக் காத்திருப்போரின் பட்டியல் நீண்டு இருப்பதாகவும், குறைந்த வருவாய் பெரும், எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்களுக்கு, தகுதி இல்லாதவர்கள் வழிவிட வேண்டும் என்றும், ஜக்டீப் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

வீட்டு வாடகையை முறையாக செலுத்தவில்லை அல்லது வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்துக்கொண்டனர் போன்ற காரணங்களுக்காக, அவர்களுக்கு வெளியேற்ற அறிக்கை வழங்கப்பட்டுள்ளது என சூ தெரிவித்தார்.

“வெளிநாட்டவரைத் திருமணம் செய்துகொண்டார் எனும் காரணத்திற்காக, ஒருவரை கட்டாயமாக வெளியேற்றுவது அறிவுடைமையாகாது.

“இம்மக்களை வெளியேற்றுவது, B40 குழுவினருக்கு எதிரான ஒடுக்குமுறையாகும், காரணம் இந்தப் பிபிஆர் வீடுகளில் வசிக்கும் ஒருவருக்குத் தான் விரும்பும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை இல்லாமல் போகிறது,” என்று சூ சொன்னார்.

‘லீகா முஸ்லிம்’ அரசுசார்பற்ற இயக்கத்தின் மண்டபத்தில் இரவைக் கழிக்கும் வெளியேற்றப்பட்ட 7 குடும்பங்கள்

“வாடகை பணம் செலுத்தாததன் காரணம், அவர்களின் குறைந்த வருமான நிலையாகும். ஏழை மக்களைத் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றி, மற்ற ஏழை மக்களை அதில் வாழச் செய்வது, நியாயமற்றது மட்டுமல்ல, முட்டாள்தனமும் ஆகும்,” என்று சூ மேலும் கூறினார்.

பினாங்கில், பிபிஆர் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினையை, அதுபோன்ற வீடுகள் உருவாக்குவதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்றும், ஏற்கனவே இருக்கும் மக்களை வெளியேற்றுவதன் மூலம் அதனைத் தீர்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.

“பிபிஆர் வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களை வெளியேற்றுவதை நிறுத்துங்கள். அவர்களது வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, மாநில அரசு வழிவகை காண வேண்டும்,” என்று சூ கூறினார்.