குற்றவியல் நடவடிக்கைகளின் மேலாண்மையில், 1எம்டிபி-க்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக புதிய சட்டத்துறை தலைவர் டோனி தோமஸ் உறுதியளித்தார்.
“சட்டத்திற்கு முன்னால் எல்லோரும் சமமானவர்கள், யாரையும் தப்பிக்கவிட முடியாது.
“வழக்கை மூடுவதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படாது,” என்று , இன்று தனது அலுவலகத்திற்கு வந்த பின்னர், செய்தியாளர் கூட்டத்தில் தோமஸ் பேசினார்.
சம்பந்தப்பட்ட விசாரணை ஆவணங்களைப் பார்த்த பின்னர், இந்த விஷயத்தின் அதிகார எல்லைக்குள் இருக்கும், மற்ற அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவிருப்பதாக அவர் சொன்னார்.
அடக்குமுறைச் சட்டங்களை நீக்கவுள்ளதாகவும், அதற்கு ஒரு “நீண்ட பட்டியல்” இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மீது அல்லது அப்பாவிகள் மீது வழக்கு தொடர்வது இனி இருக்காது, எனவே யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் தோமஸ் உறுதியளித்தார்.
“மலேசியா ஒரு சுதந்திர நாடாகும், நள்ளிரவில் கதவுகள் தட்டப்பட்டால் அது போலிஸ் அதிகாரிகள் என நாம் பயப்படக்கூடாது.
“ஆனால், சட்டத்தை மீறுபவர்கள், கண்டிப்பாக சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும், அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும்.
“எனது தரப்பில், நான் சரியானதைச் செய்வேன் என உறுதியளிக்கிறேன், அதாவது உண்மையைச் சொல்வேன், நீதியை நிலைநிறுத்துவேன்,” என்று தோமஸ் தெரிவித்தார்.