மலாய்க்காரர் நலனுக்குப் போராடும் வலச் சாரி இயக்கமான பெர்காசா, ஆட்சியாளர்களைப் பழித்துரைப்போருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்துள்ளது.
அனைவரும் பேரரசரிடமும் மற்ற மலாய் ஆட்சியாளர்களிடமும் மரியாதையுடனும் விசுவாசத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று பெர்காசாவின் இஸ்லாமிய விவகாரப் பிரிவுத் தலைவர் அமினி அமிர் அப்துல்லா இன்று ஓர் அறிக்கையில் வலியுறுத்தினார்.
மூத்த பத்திரிகையாளரும் பெர்சத்துக் கட்சி உச்சமன்ற உறுப்பினருமான ஏ. காடிர் ஜாசின் தம் வலைப்பதிவில் டோம்மி தோமஸ் சட்டத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து கருத்துரைத்தபோது பேரரசருக்காக செலவிடப்படும் பணம் பற்றிய விவரங்களையும் வெளியிட்டதை அடுத்து பெர்காசா இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டது.
“பேரரசருக்கான செலவினங்கள் பற்றிய விவரங்கள் வைரலாவது, முடியாட்சியை அகற்றிவிட்டு நாட்டைக் குடியரசாக்கக் கோரிக்கைகள் விடுக்கப்படுவது போன்ற அண்மையை நிலவரங்கள் பெர்காசாவைக் கவலைகொள்ள வைக்கின்றன”, என்றாரவர்.